மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணையில் இருந்து 1,754 கன அடி தண்ணீர் திறப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்கிறது. தண்ணீர் வரத்து இருப்பதால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,754 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரம்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்கிறது. தண்ணீர் வரத்து இருப்பதால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,754 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கனமழைஒகி புயலால் நெல்லை மாவட்டத்தில் பரலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடனாநதி, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 6 அணைகள் நிரம்பின.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு, சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, அடவிநயினார் ஆகிய அணைகளும் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே ஒகி புயல் திசை மாறி சென்றதால் மழை குறைந்தது.
பாபநாசம் அணைஇந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் 138.55 அடியாக நீர்மட்டம் இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு 925 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1754 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று 138.10 அடியாக குறைந்தது.
மற்ற அணைகளில்...156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 147 அடியாக இருந்தது. அணையில் இருந்து 1190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம் 143 அடியாக குறைந்தது. இதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 111 அடியாக இருந்தது. அணைக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 111.30 அடியாக உயர்ந்துள்ளது.
50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 46 அடியாக இருந்தது. இதேபோல் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 113 அடியாக இருந்தது.
வாய்மொழி உத்தரவுஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென்று கனமழை பெய்தால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி விடும். அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டிய இருக்கும். திடீர் வெள்ளப்பெருக்கால் தாமிரபரணி கரையோர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே வாய்மொழி உத்தரவாக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.