கடலூர் மாவட்ட மீனவர்கள் 31 பேர் மீட்பு மேலும் 24 பேரை தேடும் பணி தீவிரம்


கடலூர் மாவட்ட மீனவர்கள் 31 பேர் மீட்பு மேலும் 24 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:45 AM IST (Updated: 8 Dec 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான கடலூர் மாவட்ட மீனவர்கள் 31 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 24 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் முதுநகர்,

வங்க கடலில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக தமிழக, கேரள மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள். இவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு முப்படை அதிகாரிகளை முடுக்கிவிட்டது.

அந்தவகையில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை, விமானப்படை மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். இருப்பினும் பெரும்பாலான மீனவர்கள் மராட்டியம், குஜராத் கடலோர பகுதியில் கரையேறினர்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக கன்னியாகுமரி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அங்கு ‘ஒகி’ புயலால் சிக்கியவர்களில் பலர் மாயமாகி விட்டனர். இதில் 31 மீனவர்கள் பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் இருந்து பல மீனவர்கள் கன்னியாகுமரி மற்றும் கேரளாவிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று உள்ளனர். இதுவரை எங்களுக்கு வந்த மீனவர்களின் புகார் அடிப்படையில் 55 மீனவர்கள் காணவில்லை. இதில் 31 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இவர்களில் 12 மீனவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். மற்றவர்கள் விரைவில் வீடு திரும்புவர்.

மீதமுள்ள 24 மீனவர்கள் நிலைமை என்ன என்பது பற்றி தெரியவில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களின் விவரம் வருமாறு:- சோனாங்குப்பத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 45), ராசாப்பேட்டை ராஜ் (33), முருகவேல் (45), புலேந்திரன் (45), முருகன் (32), சுகுமாறன் (30), சின்னூர் சங்கர் (48), கோவிந்தராஜ் (37), ராமையான் (53), தேவனாம்பட்டினம் ராஜாராம் (38), ராஜீவ்காந்தி (33), ராஜ் (30), இளவரசன் (28), தினேஷ் (28), அன்பு (35), சுமன் (26), மாதவன் (32), முருகன் (32), வேலு (45), சேகர் (40), ஜான்சன் (27), ரமேஷ் (41), சுரேஷ் (30), இளமாறன் (35).

இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், கடலூர் துறைமுக பகுதியில் மீன்பிடி தொழில் சரியாக இல்லாததால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது ஒகி புயலால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் சிக்கியுள்ளனர். இவர்களில் 24 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர மேலும் சிலர் மாயமாகி இருக்கக்கூடும். அவர்களை பற்றி புகார் வராததால் வெளியே இன்னும் தெரியவில்லை என்றார்.

Next Story