கலெக்டர் ஆய்வின் போது போலி டாக்டர் சிக்கினார்


கலெக்டர் ஆய்வின் போது போலி டாக்டர் சிக்கினார்
x
தினத்தந்தி 8 Dec 2017 5:15 AM IST (Updated: 8 Dec 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் ஆய்வு செய்த போது போலி டாக்டர் சிக்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த பணியை நேற்று காலை கலெக்டர் சுப்பிரமணியன், வீடு, வீடாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள வீடு ஒன்றில், ஒருவர் டாக்டர்போல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார். உடனே அவரிடம் சந்தேகத்தின் பேரில் கலெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவரிடம் உரிய விசாரணை நடத்தும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பியர்லின் மேபல்ரூபமதி, விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ராஜ் குமார், ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வினோத், மருந்து ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் விக்கிரவாண்டி தாலுகா எழாய் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்கிற கென்னடி (வயது 52) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துள்ளதும், மருத்துவ படிப்பு படிக்காமலேயே போலியான சான்றிதழ்களை வைத்துக்கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் தனக்கு தெரிந்த சிலருக்கு வீடு, வீடாக மொபட்டில் சென்று ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த அதிக வீரியமுள்ள மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story