போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரூ.20 ஆயிரத்துடன் வந்த வாலிபரால் பரபரப்பு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரூ.20 ஆயிரத்துடன் வந்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Dec 2017 7:00 AM IST (Updated: 8 Dec 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரூ.20 ஆயிரத்துடன் வந்த வாலிபரால் பரபரப்பு

விழுப்புரம்,

உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தி சிலர் கண்காணிப்பதாக கூறி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரூ.20 ஆயிரத்துடன் புகார் அளிக்க வந்த வாலிபரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வாலிபர் ஒருவர் மனு கொடுக்க வந்தார். அவர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து, தான் கொண்டு வந்திருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் விழுப்புரம் அருகே மண்டகப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் ராஜீவ்காந்தி (வயது 25) என்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில் அவர் போலீஸ் சூப்பிரண்டிடம் கூறுகையில், திரைப்படத்தில் வரும் கதையைப்போல, தனது உடலில் யாரோ சிலர் ‘மைக்ரோ சிப்’ பொருத்தி தைத்துள்ளனர். அதன் மூலமாக அவர்கள் என்னை கண்காணிக்கின்றனர். ஆகவே அதனை அறுவை சிகிச்சை செய்து எனது உடலில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். அதற்காக வீட்டில் இருந்த நகையை எடுத்து வங்கியில் அடகு வைத்து ரூ.20 ஆயிரம் கொண்டு வந்துள்ளேன் என்றார். இதனை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அந்த வாலிபர் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.

பின்னர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வீமராஜை வரவழைத்து, ராஜீவ்காந்தியை பாதுகாப்பாக பணத்துடன் வீட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டதுடன் அவருக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அறிவுரை கூறினார். அதன்படி அவரை பணத்துடன் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு ஓரிரு நாளில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநல டாக்டர்கள் மூலம் உரிய ஆலோசனை வழங்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பணத்துடன் வந்து திரைப்படத்தில் வரும் கதையைப்போல் வாலிபர் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story