மானாமதுரை பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி


மானாமதுரை பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 8 Dec 2017 4:28 AM IST (Updated: 8 Dec 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து வரும் நிலையில், போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை நகரம் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நகரை வைகை ஆறும் தன்பங்கிற்கு இரண்டாக பிரிக்கிறது. கிழக்கு கரையில் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோர்ட்டு, சிப்காட், தாலுகா அலுவலகம் உள்ளிட்டவையும், மேற்கு கரையில் வங்கிகள், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், கருவூலம், பஸ் நிலையம் உள்ளிட்டவையும் உள்ளன. இதுபோக மானாமதுரையை சுற்றி 39 ஊராட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்புற மக்கள் மட்டுமல்லாது நகர்ப்புற மக்களும் கடைகள், ஆஸ்பத்திரிகளுக்கு மானாமதுரை நகரையே நம்பியுள்ளனர். சமீப காலமாக மானாமதுரை பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போலீஸ் நிலையம் அருகிலேயே அடுத்தடுத்து உள்ள 3 கடைகளில் பணம், பொருட்கள் திருடப்பட்டன. இதேபோல் இப்பகுதியில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து சில மர்ம ஆசாமிகள் நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் மானாமதுரை நகர் பொதுமக்கள் மற்றும் வேலை தொடர்பாக கிராமங்களில் இருந்து நகருக்கு வரும் மக்கள் ஒருவித பீதியுடன் உள்ளனர்.

ஆனால் திருட்டு சம்பவங்கள் ஒருபுறம் அரங்கேறி வரும் நிலையில், அதில் ஈடுபடும் திருடர்களை பிடிக்காமல் போலீசார் பெயரளவுக்கு வாகன சோதனையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரையில் உள்ள குற்றவாளிகள் பலரும் மானாமதுரை பகுதியில் உலா வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மானாமதுரை வட்டாரத்தில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. குற்றவாளிகள் பலரும் தங்களது வாகனங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் போலீசார் கண்டுகொள்வது இல்லை. வாகன சோதனை நடத்தும்போது, ஆவணங்களை மட்டுமே சரிபார்க்கின்றனர். அவை இல்லாவிடில் அபராதம் விதிக்கின்றனர். இதனை பயன்படுத்தி பல குற்றவாளிகள் அபராதம் செலுத்திவிட்டு எளிதில் தப்பிவிடுகிறார்கள். எனவே வாகன சோதனையின்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருடர்களை கண்டறிந்து குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story