அரசு ஆஸ்பத்திரியில் நவீன சி.டி.ஸ்கேன் எந்திரம் முடக்கம்


அரசு ஆஸ்பத்திரியில் நவீன சி.டி.ஸ்கேன் எந்திரம் முடக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:37 AM IST (Updated: 8 Dec 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1¼ கோடி மதிப்பிலான நவீன சி.டி. ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராத நிலை உள்ளதால் அதனை உடனடியாக பரிசோதனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு நவீன சி.டி. ஸ்கேன் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் டயாலிசிஸ் வசதிகள் செய்து தரப்படும் என அறிவித்தார். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்களுக்கு அதிநவீன முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.1¼ கோடி மதிப்புள்ள சி.டி. ஸ்கேன் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நவீன எந்திரமும் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு அந்த நவீன ஸ்கேன் எந்திரத்தை அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர தொழில்நுட்ப வல்லுனர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகள் அந்த எந்திரத்தை பொருத்துவதற்கு உரிய இடம் இல்லை என்று கூறி அதனை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் முடக்கி வைத்துள்ளனர். இதுபற்றி ஆஸ்பத்திரி அலுவலர் ஒருவர் கூறுகையில், இந்த நவீன எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருந்தால் அந்த ஸ்கேன் எந்திரம் வேறு ஊரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவித்தார்.

எனவே நவீன சி.டி. ஸ்கேன் எந்திரம் இந்த அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட உடனடியாக அதனை பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story