முப்படை வீரர்கள் நலனுக்காக நிதி வசூலித்து தரப்படும் கிரண்பெடி அறிவிப்பு
கவர்னர் மாளிகை சார்பில் முப்படை வீரர்கள் நலனுக்கான நிதி வசூலித்து தரப்படும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
கடந்த ஆண்டு அதிக கொடி நாள் நிதி வசூலித்து கொடுத்த துறையின் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று காலை நடந்தது. விழாவில் கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி துறையின் அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கொடிநாள் நிகழ்ச்சி என்பது நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் நாளாகும். இதை புதுச்சேரியில் கொண்டாடும் முப்படை வீரர் நலத்துறையை பாராட்டுகிறேன். கேடயம் பெற்ற அனைத்து துறையினருக்கும் பாராட்டுக்கள் ராணுவ வீரர்கள் நம்மையும், நாட்டையும் மிகவும் கடினமான சூழ்நிலையில் பேணி பாதுகாத்து வருகின்றனர். நாட்டில் அமைதியையும் காத்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஏற்படும் இழப்பை நம்மால் ஈடுசெய்ய முடியாது. இதற்காக ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் செய்யும் தியாகமும் அளவிட முடியாதது. எனவே கொடிநாள் வசூல் என்னும் நிதியை வசூலித்து தருவது நாம் அவர்களுக்கு செலுத்தும் சிறுநன்றியாகும்.
கொடிநாள் நிகழ்ச்சி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சிறந்த அறிவுரை கிடைக்கிறது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் தைரியத்தை மாணவர்கள் அறிகின்றனர். மனித உயிரை விட விலை மதிப்பில்லாதது எதுவும் இல்லை. அது போய்விட்டால் அவ்வளவு தான். வரும் ஆண்டுகளில் கவர்னர் மாளிகை சார்பிலும் முப்படை வீரர்கள் நலனுக்காக நிதி வசூலித்து தரப்படும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் ஆண்டு முழுவதும் கொடி நாள் வசூலில் முப்படை வீரர் நலத்துறை, இதர துறைகள் ஈடுபடலாம். பள்ளி, குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவியரும் தங்கள் செலவுக்கு பெற்றோர் தரும் பணத்தை நன்கொடையாக தருகின்றனர். வசதி படைத்தோரையும் இந்த நிகழ்வில் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அரசுத்துறை செயலாளர்கள் கந்தவேலு, சுந்தரவடிவேலு, கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ், கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், போக்குவரத்து துறை ஆணையர் சுந்தரேசன், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் மற்றும் முப்படை வீரர் நலத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கடந்த 2016–17ம் ஆண்டில் முதல் பரிசுக்கான கேடயத்தை கல்வித்துறை இயக்குனர் குமார் 2–வது பரிசுக்கான கேடயத்தை கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், 3–வது பரிசுக்கான கேடயத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதேபோல் மற்ற பிராந்தியங்களுக்கான முதல் பரிசை காரைக்காலும், 2–வது பரிசை மாகியும், 3–வது பரிசை ஏனாமும் பெற்றுக்கொண்டது. மற்ற அமைப்புகளுக்கான முதல் பரிசை ஜிப்மர் பெற்றுக்கொண்டது. இதற்கான கேடயங்கள் வழங்கப்பட்டன.