குளத்தில் இருந்து குட்டைகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விடப்படுகிறது


குளத்தில் இருந்து குட்டைகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விடப்படுகிறது
x
தினத்தந்தி 9 Dec 2017 3:15 AM IST (Updated: 9 Dec 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

கண்ணம்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குளத்தில் இருந்து குழாய் மூலம் குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டு வருகிறது.

சூலூர்,

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 90 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. வெள்ளலூர் நொய்யல் ஆறு அணைக்கட்டில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் பள்ளபாளை யம் குளத்துக்கு தண்ணீர் வந்து, அங்கிருந்து கண்ணம்பாளையம் குளத்துக்கு தண்ணீர் வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு நிலவிய போது கண்ணம்பாளையம் தெற்குப்புறம் மேடான பகுதியில் உள்ள 2 குட்டைகளுக்கு குளத்தில் இருந்து தண்ணீரை கொண்டு சென்று நிரப்பும் திட்டம் குளத்து கமிட்டியினரால் உருவாக்கப்பட்டது.

இதை செயல்படுத்த பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி 2014-ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி குளத்தின் அருகே கிணறு வெட்டப்பட்டது. அதில் தேக்கப்படும் தண்ணீரை 50 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டாரை வைத்து எடுத்து குழாய் மூலம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதன் மூலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் 200 கிணறுகள், 40 ஆழ்துளை கிணறுகள் நீராதாரம் பெறுகின்றன. இந்த நிலையில் தற்போது கண்ணம்பாளையம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே கண்ணம்பாளையம் குளத்தில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குட்டைக்கு குழாய் மூலம் கடந்த சில நாட்களாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது.

மேலும் அதன் அருகே உள்ள 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட மற்றொரு குட்டைக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. இதனால் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் தீரும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

இது குறித்து முன்னாள் பேரூராட்சி தலைவர் தளபதி முருகேசன் கூறியதாவது:-

கண்ணம்பாளையம் குளத்தில் இருந்து குழாய் மூலம் குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம் அப்போதைய கலெக்டர் கருணாகரன் மற்றும் பொதுப்பணித்துறை அனுமதி யுடன் பேரூராட்சி நிர்வாகம், குளத்து கமிட்டியினருடன் இணைந்து ரூ.60 லட்சம் செலவில் செயல் படுத்தப்பட்டது. தமிழகத்திலேயே முதன்முறையாக மேடான பகுதியில் உள்ள குட்டைகளுக்கு தாழ்வான பகுதியில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் கண்ணம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story