திருச்செந்தூரில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க கோரிக்கை
ஒகி புயலில் மாயமான மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க வலியுறுத்தி, திருச்செந்தூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்,
ஒகி புயலில் மாயமான மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க வலியுறுத்தி, திருச்செந்தூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்நெய்தல் மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்க தலைவர் தாமஸ் தலைமை தாங்கினார். இயக்க செயலாளர் ஜென்சன், துணை செயலாளர்கள் ரிஜாய், கோல்டன் மற்றும் தூத்துக்குடி, புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டினம், ஜீவாநகர், அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை, கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தங்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்களின் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு கேரள மாநிலத்தைப் போன்று ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். புயலில் சிக்கி குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவு உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரைசேர்ந்த தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்மாவட்ட கடற்கரையில் மீனவர்களின் பாதுகாப்புக்காக நிரந்தரமாக கப்பல், ஹெலிகாப்டரை நிறுத்த வேண்டும்.
புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் விவரங்களை அரசு மறைக்காமல் முழுவதுமாக வெளியிட வேண்டும். புயலால் மீன்பிடிக்க செல்லாத மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை ரூ.2,500–ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மீட்பு பணியை தாமதப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புயலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை காப்பாற்ற வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.