தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்த தொழிலாளி
தூத்துக்குடியில் வாலிபர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வாலிபர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டுடன் வந்த தொழிலாளி
தூத்துக்குடி அண்ணா நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் முகேஷ் என்ற கருப்பு முகேஷ் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் ஒரு வெடிகுண்டுடன் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது முகேஷ் போலீசாரிடம் கூறியதாவது;–
தனக்கும்(முகேசுக்கும்), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த வேல்சங்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் வேல்சங்கர் ராஜகோபால் நகரை சேர்ந்த ஆத்திமுத்து மகன் முத்துமணி (25) என்பவர் மூலம் என்னை கண்காணித்து வந்தார். முத்துமணி கடந்த சில வாரங்களாக என்னை பின்தொடர்ந்து வந்தார்.
இதனை அறிந்த நான், நேற்று மதியம் ராஜகோபால் நகர் பகுதியில் வந்த முத்துமணியை வழிமறித்து அரிவாளால் வெட்டியும், பின்னர் வெடிகுண்டு வீசி அவரை கொல்ல முயற்சித்தேன், என தெரிவித்தார்.
தொடர் விசாரணை
இதனை அடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் முகேசை சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது சிப்காட் போலீசார் முகேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அரிவாளால் வெட்டப்பட்டதாக கூறப்படும் முத்துமணி என்பவர், எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.