தாளவாடியில் பயங்கர கலவரம்: இரு தரப்பினர் கோஷ்டி மோதல்; 5 பேர் படுகாயம்


தாளவாடியில் பயங்கர கலவரம்: இரு தரப்பினர் கோஷ்டி மோதல்; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Dec 2017 5:00 AM IST (Updated: 9 Dec 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடியில் ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதல் கலவரமாக மாறியது. இதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பதற்றத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்தவர் சுயபுல்லாபெக் (வயது 20). இவருடைய தங்கை தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற இவரை மாணவர்கள் 3 பேர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சுயபுல்லாபெக்குக்கு தெரியவந்தது. உடனே அவர் இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் முறையிட சென்றார். ஆனால் அவர் பள்ளியில் இல்லாததால் தன்னுடைய தங்கையை வீட்டுக்கு அழைத்து சென்றார். பள்ளியை விட்டு வெளியே தங்கையுடன் வந்த அவரை அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது.

இதுபற்றி சுயபுல்லாபெக் தாளவாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்தநிலையில் நேற்று மாலை 6¼ மணி அளவில் தாளவாடி பஸ்நிலையம் எதிரே உள்ள ஒரு கடையில் ஒரு தரப்பை சேர்ந்த 20 பேர் டீக்குடித்துக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த 20 பேர் வந்தார்கள். உடனே திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டார்கள்.
இந்த தாக்குதலில் தாளவாடியை சேர்ந்த சிவமல்லு (வயது 23) என்பவரை யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள். ரத்தம் சொட்டச்சொட்ட அலறித்துடித்த அவரை அவருடன் வந்தவர்கள் மீட்டு, தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

அதே நேரம் ஏற்கனவே மோதல் ஏற்பட்ட இடத்தில் ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 200 பேர் திரண்டார்கள். இன்னொரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டார்கள்.

பின்னர் சினிமாவில் வருவதுபோல் கைகளில் உருட்டு கட்டைகளை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டார்கள். இதைப்பார்த்ததும் பஸ்நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த பயணிகள் ஓடினார்கள். வெளியூர்களுக்கு செல்ல தயாராக இருந்த பஸ்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கலவரம் நடந்த இடம் அருகே இருந்த ஒரு டீக்கடை, பழக்கடை, பானிபூரி கடை அடித்து நொறுக்கப்பட்டன. சில நிமிடங்களில் அந்த இடமே போர்க்களம்போல் ஆனது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் 5 போலீசாரே சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். சுமார் 400 பேர் மோதிக்கொள்ளும் இடத்தில் சொற்பமான போலீசாரால் எதுவும் செய்யமுடியவில்லை. இதுபற்றி உடனடியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தகவல் கிடைத்ததும் சத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார் (சத்தி), நெப்போலியன் (பங்களாப்புதூர்) ஆகியோர் போலீசாருடன் அங்கு விரைந்தார்கள். ஆனாலும் மாலை 6¼ மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து 400 பேரும் மோதிக்கொண்டார்கள். அதற்கு மேல் போலீசார் அதிக அளவில் அங்கு வந்து சேர்ந்ததும், கலவரக்காரர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.

இந்த கலவரத்தில் தாளவாடியை சேர்ந்த சுயபெல்லாபெக், சித்து (21), ராமமூர்த்தி (22), அக்ரம் ஷேரீப் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். பின்னர் முதலில் சேர்க்கப்பட்ட சிவமல்லுவுடன் சேர்த்து 5 பேரும் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இதற்கிடையே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் நேற்று இரவு தாளவாடி வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story