திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை-ரூ.1½ லட்சம் திருட்டு
திருவொற்றியூரில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் நேதாஜி நகர், 5-வது தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 42). கன்டெய்னர் லாரி உரிமையாளரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருக்கோவிலூர் கோவிலுக்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் அவருடைய தம்பி கிருஷ்ணமூர்த்தி வந்து பார்த்தபோது அண்ணன் செந்தில்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
நகை, பணம் திருட்டு
போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, செந்தில்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து கோவிலுக்கு சென்ற செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் குடும்பத்துடன் விரைந்து வந்து திருவொற்றியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகையை பதிவு செய்து சென்றனர். பீரோவில் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த 28 பவுன் தங்க நகைகள் திருடர்கள் கண்ணில் படாததால் அவை தப்பியது.
Related Tags :
Next Story