கடந்த வாரத்தை விட காய்கறிகள் விலை 15 சதவீதம் குறைந்தது சாம்பார் வெங்காயம் தொடர்ந்து உச்சம்
கடந்த வாரத்தை விட காய்கறிகள் விலை 15 சதவீதம் குறைந்துள்ளது.
சென்னை,
மழை காரணமாக போதிய விளைச்சல் உள்ளதால் கடந்த வாரத்தை விட காய்கறிகள் விலை 15 சதவீதம் குறைந்துள்ளது என்றும், சாம்பார் வெங்காயம் விலை மட்டும் தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
விளைச்சல் குறைவால் கடந்த சில மாதங்களாகவே காய்கறிகள் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதியில் மழை பெய்துள்ளதால் காய்கறிகள் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், இதன் காரணமாக விலை குறைந்துள்ளதாகவும் சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்க துணைத்தலைவர் சுகுமார் கூறியதாவது:-
போதிய மழைப்பொழிவு இல்லாததால் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே காய்கறிகள் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. தற்போது மழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் போதிய அளவு உள்ளது. இதன் காரணமாக அதன் வரத்து அதிகரித்து உள்ளது.
கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக் காக வந்து கொண்டு இருந்தன. ஆனால் இப்போது காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் 350 முதல் 400 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் கடந்த வாரத்தை விட காய்கறிகள் விலை 15 சதவீதம் குறைந்து இருக்கிறது.
ஆனால் சாம்பார் வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்திலே உள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் 15 நாட்களுக்குள் அதன் விலை கணிசமாக குறைய தொடங்கிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம்(கிலோவுக்கு) வருமாறு:-
தக்காளி - ரூ.30 முதல் ரூ.35 வரை, வெண்டைக்காய் - ரூ.20 முதல் ரூ.25 வரை, உருளைக்கிழங்கு - ரூ.15, பீன்ஸ் - ரூ.40 முதல் ரூ.50 வரை, அவரைக்காய் - ரூ.35 முதல் ரூ.45 வரை, நூக்கல் - ரூ.10 முதல் ரூ.15 வரை, கத்தரிக்காய் - ரூ.20 முதல் ரூ.25 வரை, கேரட் - ரூ.50 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி - ரூ.10 முதல் ரூ.20 வரை, பீட்ரூட் - ரூ.20 முதல் ரூ.25 வரை, முட்டைக்கோஸ் - ரூ.20 முதல் ரூ.25 வரை, சவ்சவ் - ரூ.10 முதல் ரூ.15 வரை, புடலங்காய் - ரூ.20, கோவைக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பாகற்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, பீர்க்கங்காய் - ரூ.20 முதல் ரூ.25 வரை, மிளகாய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பல்லாரி - ரூ.40 முதல் ரூ.45 வரை, இஞ்சி - ரூ.30 முதல் ரூ.35 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.160, முருங்கைக்காய் - ரூ.120 முதல் ரூ.130 வரை, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.20 முதல் ரூ.30 வரை.
Related Tags :
Next Story