விருத்தாசலம் அருகே சோகம்: குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் சாவு


விருத்தாசலம் அருகே சோகம்: குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் சாவு
x
தினத்தந்தி 9 Dec 2017 3:45 AM IST (Updated: 9 Dec 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கலைமணி(வயது 11). இவள் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். அதேபகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ராசாத்தி(13). அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர்கள், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பினார் கள். பின்னர் நியினார் குளம் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதற்காக கலைமணி, ராசாத்தி இருவரும் ஒன்றாக சென்றனர்.

அப்போது குளத்தில் இருவரும் கை, கால்களை கழுவியதாக தெரிகிறது. இந்நிலையில், நிலைதடுமாறி குளத்தின் உள்ளே இருவரும் தவறி விழுந்தனர். குளத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால், அதில் மூழ்கிய அவர்கள், சத்தம்போட்டனர்.

உடன் அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று, இருவரையும் மீட்டனர். இதில் மயங்கிய நிலையில் இருந்த அவர்களை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், கலைமணி, ராசாத்தி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story