செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்ததால் சின்னத்திரை நடிகரின் கார் கண்ணாடி உடைப்பு
பெங்களூருவில் ‘செல்பி‘ எடுக்க மறுப்பு தெரிவித்ததால் சின்னத்திரை நடிகரின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் ‘செல்பி‘ எடுக்க மறுப்பு தெரிவித்ததால் சின்னத்திரை நடிகரின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்த சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான 3 மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
சின்னத்திரை நடிகர்பெங்களூரு நகரில் வசித்து வருபவர் தீக்ஷித் ஷெட்டி. சின்னத்திரை நடிகரான இவர், கன்னட தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் நாகினி என்ற தொடரில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நண்பரை பார்த்து விட்டு தீக்ஷித் ஷெட்டி தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். விஜயநகர் அருகே வரும்போது, அவரது காரை பின்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தார்கள். அந்த நபர்கள் காரை நிறுத்தும்படி தீக்ஷித் ஷெட்டியிடம் கூறினார்கள். ஆனால் அவர் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார்.
விஜயநகர் அருகே மாருதி மந்திர் பகுதியில் வைத்து தீக்ஷித் ஷெட்டியின் காரை, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் வழிமறித்தார்கள். பின்னர் தீக்ஷித் ஷெட்டியுடன் மர்மநபர்கள் ‘செல்பி‘ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்களுடன் ‘செல்பி‘ எடுக்க தீக்ஷித் ஷெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
3 பேருக்கு வலைவீச்சுஇதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், தீக்ஷித் ஷெட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது கார் கண்ணாடி மீது கற்களால் தாக்கினார்கள். இதில், காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் அங்கிருந்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார்கள். இதுகுறித்து விஜயநகர் போலீஸ் நிலையத்தில் தீக்ஷித் ஷெட்டி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.
போலீஸ் விசாரணையில், மர்மநபர்கள் 3 பேரும் குடிபோதையில் தீக்ஷித் ஷெட்டியுடன் ‘செல்பி‘ எடுக்க முயன்றதும், அவர் மறுத்ததால் கார் கண்ணாடியை கல்வீசி அவர்கள் உடைத்ததும் தெரியவந்துள்ளது. தலைமறைவான 3 மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.