ஊத்துக்கோட்டை அருகே பணம் கொடுக்காததால் தந்தையை கொன்ற மகன்


ஊத்துக்கோட்டை அருகே பணம் கொடுக்காததால் தந்தையை கொன்ற மகன்
x
தினத்தந்தி 9 Dec 2017 4:45 AM IST (Updated: 9 Dec 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

தொழில் தொடங்க நிலத்தை விற்று பணம் கொடுக்காத தந்தையை கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை காலனியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 60). விவசாயி. இவரது மனைவி செல்வி ( 50). இவர்களுக்கு சத்தியமூர்த்தி (29) என்ற மகன், சரண்யா, சவுமியா என்ற மகள்கள் உள்ளனர். இவர்களில் சரண்யா, சவுமியாவுக்கு திருமணமாகிவிட்டது. சத்தியமூர்த்திக்கு இன்னும் திருமணமாக வில்லை. இந்த நிலையில் சத்தியமூர்த்தி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். ஏதாவது வேலை செய்யும்படி ராமராஜ் தன்னுடைய மகன் சத்தியமூர்த்தியை அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

ராமராஜ்க்கு சொந்தமாக 1½ ஏக்கர் நிலம் உள்ளது. இதை விற்று ரூ.1 லட்சம் தந்தால் ஏதாவது தொழில் தொடங்குவேன் என்று சத்தியமூர்த்தி சொல்லி வந்தார்.

கொலை

செல்வி தினந்தோறும் கோயம்பேடு சென்று பழம் விற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு செல்வி கோயம்பேடு சந்தைக்கு சென்று விட்டார். வீட்டில் ராமராஜ், சத்தியமூர்த்தி இருவரும் இருந்தனர். அப்போது நிலத்தை விற்று ரூ.1 லட்சம் கொடுத்தால் ஏதாவது தொழில் செய்வேன் என்று சத்தியமூர்த்தி தன்னுடைய தந்தையிடம் கேட்டார். நிலத்தை விற்று பணம் தர முடியாது என்று ராமராஜ் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் தந்தை, மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதில் ராமராஜ் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சத்தியமூர்த்தி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story