சென்னையை அடுத்த பல்லாவரத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
பல்லாவரத்தில் தொல்லியல் துறையினர் தடை விதித்த பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி, ஜமீன் பல்லாவரம் பகுதியில் பண்டையகால பொருட்கள் பூமியில் புதைந்து உள்ளதாக கூறி தொல்லியல் துறை ஆய்வு செய்ய திட்டமிட்டு அந்த பகுதிகளில் வீடுகள் கட்ட தடை விதித்தது. இதற்கு ஜமீன் பல்லாவரம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அப்பகுதிகளில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் மூலம் நில அளவை செய்யப்பட்டது. தொல்லியல் துறை ஆய்வு நடைபெறும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் பல்லாவரம் தாசில்தார் வில்பிரட் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தாழி கண்டுபிடிப்பு
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால் போலீஸ் உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதல் நாள் ஆய்வின்போது சில இடங்களில் உடைந்த நிலையில் பண்டையகால முதுமக்கள் தாழி கிடைத்தது. செயற்கைகோள் மூலம் படம் எடுத்து அம்பேத்கர் விளையாட்டு திடல் அருகில் நேற்று மாலை தொல்லியல் துறையினர் பூமியை தோண்டி ஆய்வு செய்தனர்.
அப்போது சுடு மணலால் செய்யப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. 1½ அடி அகலமும், 6 அடி நீளமும் கொண்ட முதுமக்கள் தாழியின் அடிப்பகுதியில் 1 அடியில் மணலால் 12 கால்கள் செய்யப்பட்டிருந்தது. அந்த முதுமக்கள் தாழியை தலைமை செயலக வளாகத்தில் உள்ள ஆய்வகத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். ஆய்வுக்கு பின்னர் இந்த முதுமக்கள் தாழி எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது கண்டறியப்படும் என்றும் தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வுகள் இந்த பகுதியில் நடைபெறும் என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story