சன்னகிரி தாலுகாவில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்-பசுமாடு செத்தது


சன்னகிரி தாலுகாவில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்-பசுமாடு செத்தது
x
தினத்தந்தி 9 Dec 2017 3:00 AM IST (Updated: 9 Dec 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

சன்னகிரி தாலுகாவில் நேற்று 3 காட்டு யானைகள் புகுந்தன. இதில் ஒரு காட்டு யானை தாக்கியதில் பசுமாடு ஒன்று செத்தது

சிக்கமகளூரு,

சன்னகிரி தாலுகாவில் நேற்று 3 காட்டு யானைகள் புகுந்தன. இதில் ஒரு காட்டு யானை தாக்கியதில் பசுமாடு ஒன்று செத்தது. மேலும் யானையின் தாக்குதலில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். அத்துடன் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் 10 குடிசை வீடுகள் சேதமடைந்தன.

தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

யானைகள் அட்டகாசம்


சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் கடந்த 23-ந்தேதி முதல் 2 காட்டு யானைகள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதைதொடர்ந்து வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் அந்த காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி துமகூரு மாவட்டம் சிரா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து விளைபயிர்களை நாசப்படுத்தின. அங்கிருந்து வனத்துறையினர் விரட்டியதால், அந்த காட்டு யானைகள் ஆந்திர மாநிலம் மல்லேசுபுராவில் புகுந்து விவசாய பயிர்களையும் தின்று சேதப்படுத்தின. அத்துடன் ஒரு காட்டு யானை, விவசாயிகள் 2 பேரை தாக்கி கொன்றது. அதன் பின்னர் 2 யானைகளுடன் இன்னொரு யானையும் சேர்ந்து சுற்றித்திரிந்தது.

10 குடிசை வீடுகள் சேதம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூருக்கு 3 காட்டு யானைகளும் நுழைந்தன. அந்த பகுதியை சேர்ந்த 2 பேரையும் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு காட்டு யானை தாக்கியது. இதையடுத்து வனத்துறையினர் 3 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வனப்பகுதிக்குள் செல்லாமல், தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா தேவனகெரே கிராமத்திற்குள் நேற்று காலை 3 காட்டு யானைகளும் புகுந்தன. அவை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை காலால் மிதித்தும், தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தின.

மேலும் அந்த கிராமத்தின் அருகே சூளகெரே பகுதியில் உள்ள கால்வாயை கடந்து சென்ற காட்டுயானைகள், அசோக்நகர் கேம்ப் பகுதிக்குள் புகுந்தன. அங்குள்ள குடிசை வீடுகளை யானைகள் முட்டி சேதப்படுத்தின. இதில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்தன. யானைகளை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். காட்டுயானைகள் அந்தப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை தாக்கின. இதில் ஒரு பசுமாடு செத்தது. மேலும் அப்பகுதியில் நின்ற ஒரு மோட்டார் சைக்கிளை ஒரு யானை காலால் மிதித்து சேதப்படுத்தியது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்துடன் வீடுகளில் பதுங்கி இருந்தனர்.

விவசாயி படுகாயம்

அப்போது அந்த வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சதீஷ் என்பவரை ஒரு காட்டுயானை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. மேலும் அவரை காலால் தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை கிராம மக்கள் மீட்டு தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாவணகெரே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே சுற்றி திரிந்து வருவதால் அந்த கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் காட்டு யானைகள் அட்டகாசத்தால் தேவனகெரே, சூளகெரே, மற்றும் அசோக்நகர் கேம்ப் பகுதி மக்கள் பெரும் பீதியில் வீட்டுக்குள்ளே முடங்கி போய் உள்ளனர்.

Next Story