ஜாமீனில் வந்த போது தலைமறைவு: போலீசாரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் இருந்து குதித்த பிரபல ரவுடி


ஜாமீனில் வந்த போது தலைமறைவு: போலீசாரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் இருந்து குதித்த பிரபல ரவுடி
x
தினத்தந்தி 9 Dec 2017 4:45 AM IST (Updated: 9 Dec 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் வந்த போது தலைமறைவான ரவுடி போலீசாரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் இருந்து குதித்த போது கை முறிவு ஏற்பட்டது. தப்பிஓட முயன்ற அவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்(வயது 30), முரளி (வயது 32). பிரபல ரவுடிகள். இருவரும் நண்பர்கள். தாதா மர்டர் மணிகண்டனின் கூட்டாளி களாக இருந்து வந்தனர். அவரது உத்தரவை ஏற்று தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களுக்கு இடையே பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அப்போது ஒருவரை ஒருவர் கொலை செய்யவும் திட்டமிட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அன்று இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோது சுந்தர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து முரளியை வெட்டிக் கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், அமரன், சூர்யா, சரத், மணி என்ற மணிமொழியன், பிரகாஷ், கார்த்தி ஆகிய 7 பேரை கைது செய்தனர். சுந்தர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தலைமறைவு

இந்தநிலையில் சுந்தர், அமரன், சூர்யா, கார்த்தி, மணி ஆகிய 5 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு கோர்ட்டு உத்தரவின்பேரில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இதையொட்டி 5 பேரும் ஏனாமில் தங்கி இருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 5 பேரும் ஏனாம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் தலைமறைவாகினர். இதனை தொடர்ந்து சுந்தர் உள்பட 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே சுந்தர் மடுவுபேட் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சுந்தரின் வீட்டை சுற்றி வளைத்தனர்.

கை முறிவு

போலீசாரை கண்டதும் சுந்தர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். அப்போது அவரது இடது கை யில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவரால் அங்கிருந்து ஓட முடியவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர். தலைமறைவாக இருந்து வரும் அவரது கூட்டாளிகளான அமரன், சூர்யா, கார்த்தி, மணி ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story