மரக்கடை வைக்க அனுமதி கோரி தச்சு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மரக்கடை வைக்க அனுமதிக்க கோரி தச்சு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் அருகே செய்யது முர்துஷா பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரம் கடந்த பல ஆண்டுகளாக தச்சு தொழிலாளர்கள் சிலர் மரக்கடை வைத்து உள்ளனர். இந்த மரக்கடையின் மூலம் டேபிள், பெஞ்ச் மற்றும் வீட்டு உபயோகம் போன்ற மரத்தினால் ஆன பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மரக்கடைகள் இருந்த இடத்தின் அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். எனவே அதுவரை மரக்கடைகளை அப்புறப்படுத்தி கொள்ளுங்கள் என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மரக்கடைகளை அகற்றி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து மரக்கடைகள் இருந்த இடத்தில் யாரும் புகாதவாறு கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மரக்கடை வைத்து இருந்த ஆண், பெண் என ஏராளமானவர்கள் அங்கு கூடினர். பின்னர் கம்பி வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தச்சு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் மரக்கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தால் நேற்று காலை சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் மரக்கடைகள் நடத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு ரூ.1,000–க்கு மரம் வாங்கி அதில் டேபிள், பெஞ்ச் செய்து ஏழை, எளியவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். இதன்மூலம் எங்களுக்கு தினமும் ரூ.150 முதல் ரூ.200 வரை தான் கூலி கிடைக்குமு. இதை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2 நாளைக்கு முன்பு சாக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறி மரக்கடையை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் சொன்னார்கள். இந்த நிலையில் இன்று (நேற்று) மரக்கடைகள் வைக்க முடியாத அளவில் கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 50 ஆண்டுகளாக நடத்தி வந்த எங்களது பிழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் மீண்டும் மரக்கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். நாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் யாரையும் குறை சொல்லவில்லை. எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.