சேலம் புதிய பஸ்நிலையம் அருகே பேக் கடையில் ரூ.1½ லட்சம் கொள்ளை


சேலம் புதிய பஸ்நிலையம் அருகே பேக் கடையில் ரூ.1½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2017 4:15 AM IST (Updated: 9 Dec 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே ‘பேக்‘ கடையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே வீரபாண்டியார் நகர் உள்ளது. இங்கு செல்போன், எலக்ட்ரானிக்ஸ், இரும்பு பொருட்கள், எழுது பொருட்கள், ஸ்கூல்பேக் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த ஜூஜூராம் என்பவர் சங்கம் ஸ்கூல் பேக் என்ற பெயரில் ‘பேக்’ மொத்த விற்பனை கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு அவர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று காலை மீண்டும் கடையை திறப்பதற்காக ஜூஜூராம் வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடைக்குள் சென்றுபார்த்தபோது, பேக்குகள் மற்றும் சில பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும், பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.ரா

கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தொடர்பாக கடையின் உரிமையாளர் ஜூஜூராம் உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, அந்த பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் ஏதேனும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சேலம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

‘பேக்’ கடையில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாநகரில் தற்போது தொடர்ந்து பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது நேற்று முன்தினம் அழகாபுரம் பகுதியில் மொபட்டில் சென்ற ஒரு பெண்ணிடம் 6 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அதேபோல் கொண்டலாம்பட்டி பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றபோது திருடன் போலீசில் சிக்கினான். அடுத்தடுத்து தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.



Next Story