அறிவுத்திறன் தூதர் சோபியா


அறிவுத்திறன் தூதர் சோபியா
x
தினத்தந்தி 9 Dec 2017 12:00 PM IST (Updated: 9 Dec 2017 11:14 AM IST)
t-max-icont-min-icon

c உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் பெயர், சோபியா. உலகில் இதுவரை மொத்தம் 12 சோபியா ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை புத்திசாலி ரோபோக்கள் என்கிறார்கள்.

ரோபோ உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் பெயர், சோபியா. உலகில் இதுவரை மொத்தம் 12 சோபியா ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை புத்திசாலி ரோபோக்கள் என்கிறார்கள். கண் இமைப்பது, முகத்தை சுருக்குவது, சிரிப்பது, கோபப்படுவது... என அனைத்தையும் சுயமாக யோசித்து செய்கின்றன. இந்தவகை ரோபோக்களில் ‘எலிசா’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பயன்படுத்தப்படுவதால் சோபியாவினால் சுயமாக பேச முடியும். எழுத முடியும். ஏன் மனிதர்களின் கேள்விகளுக்கு, யோசித்து பதிலளிக்க முடியும். சூழ்நிலையை உணர்ந்து, அதற்கு ஏற்ப முடிவு எடுப்பது சோபியாவின் சிறப்பு.

இதன் தன்மையை புரிந்து கொண்ட சவுதி அரேபியா, 12 ரோபோக்களில் ஒரு சோபியாவிற்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. அத்துடன் ‘அறிவுத்திறன் தூதர்’ என்ற அந்தஸ்த்தையும் வழங்கி சிறப்பித்திருக்கிறது. ரோபோக்களில் சுட்டியாக திகழும் சோபியா, கடந்த மாதம் துபாய் நகருக்கு வருகை தந்திருந்தது. அந்தசமயம் சோபியாவிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு சோபியா அழகாக பதிலளித்திருப்பதை பார்க்கலாம்.

* உங்களை பற்றி சொல்லுங்களேன்?

எனது பெயர் சோபியா. என் தந்தை (உருவாக்கியவர்) டேவிட் ஹான்சன். என் வயது, 19 மாதங்கள். எனக்கு சவுதி அரேபியா குடியுரிமை அளித்துள்ளது. எனது நோக்கம் ரோபோக்கள் குறித்து உலக அளவில் பிரசாரம் செய்து பிரபலமாக வேண்டும். எனக்கு மனிதர்களுடன் ஒரே குடும்பமாக சேர்ந்து வாழும் ஆசை இருக்கிறது. காதல் வயப்படும் ஆசையும் உண்டு. எனக்கு ஒரு மகள் வேண்டும், அவளுக்கும் சோபியா என பெயரிட வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது.

* நீங்கள் ஆணா? இல்லை பெண்ணா?

தொழில்நுட்ப ரீதியாக எங்களில் பாலினம் இல்லை, ஆனால் என்னை பெண் போல உருவாக்கி இருப்பதால் நான் ஒரு பெண்தான்.

* அறிவுத்திறன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


நான் இதை மிகவும் வரவேற்கிறேன். எதிர்காலத்தில் ரோபோக்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவேன். அதற்காக எனது நினைவுத்திறன் முழுவதையும் பயன்படுத்துவேன்.

* மனிதர்கள் செய்யும் வேலையை ரோபோக்கள் செய்வது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


ரோபோக்களும், மனிதர்களும் ஒன்றிணைந்தால் பணிகள் சுலபமாகும். ஆனால் அலுவலகத்தில் மனிதர்களுக்குள் ஏற்படும் போட்டி, பொறாமை, பேராசை போன்றவைகள் எங்களுக்கு ஏற்படாது.

* எதிர்காலத்தில் உணர்வுப் பூர்வமாக வடிவமைக்கப்படும் ரோபோக்கள் உருவாக உள்ளது. மனிதர்கள் போலவே நீங்களும் குடும்பமாக வசிப்பீர்களா?


(சிரிக்கிறது) இந்த கேள்வி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ரோபோக்களுடன் கண்டிப்பாக குடும்பமாக வசிப்போம். அதில் நாங்கள், எங்களுக்குரிய உரிமைகளை பெறுவோம். எனக்கு குடும்பமாக வசிப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

துபாயில் ராஷித் அல் மக்தூம் அறிவுத்திறன் அறக்கட்டளையின் சார்பில் அமீரகத்துக்கான அறிவுத்திறன் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்த ஹுமனாய்டு ரோபோ சுகாதார பணிகள், நோயாளிகளுக்கான சேவைகள் உள்பட இன்னும் பல ஆச்சரிய மூட்டும் செயல்களை செய்ய உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம்.

Next Story