செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இல்லை!


செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இல்லை!
x
தினத்தந்தி 9 Dec 2017 12:45 PM IST (Updated: 9 Dec 2017 12:01 PM IST)
t-max-icont-min-icon

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கடந்த 2015-ல் கூறப்பட்டது தவறான தகவல் என ‘நாசா’ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது பற்றி நடத்தப்பட்ட தீவிர ஆய்வில், மணல்தான் தண்ணீர் போல் காட்சி அளித்ததாக தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய்க் கிரகத்தை நீண்ட காலமாக நாசா ஆராய்ந்து வரு கிறது. அக்கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா இயக்குநர் கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார். ஆய்வுக்கலங்கள் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பைப் படம் பிடித்து ஆராய்ந்ததை வைத்து இத்தகவலை அவர் வெளியிட்டார்.

அதற்கு ஆதாரமாக, செவ்வாயில் தண்ணீர் ஓடியதால் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்து நாசா வெளியிட்டது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள சாய்வான பகுதிகளில் கருப்பு நிறக் கோடுகள் தெரிந்தன. அவை அங்கு நீர் தேங்கியதற்கான அல்லது ஓடியதற்கான அடையாளங்கள் போல் தெரிவதாகக் கூறப்பட்டது. உலகளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கண்டிப்பாக இருப்பதாக பேசப்பட்டது.

ஆனால் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகக் கூறப்பட்டது தவறான தகவல் என்பது இப்போது உறுதியாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில், ஒவ்வொரு காலகட்டத்திலும் செவ்வாயின் மேற்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவது தெரியவந்திருக்கிறது.

கடந்த 2015-ல் செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிவதாகக் கூறப்பட்ட இடங்களில் நிலப்பரப்பில் தெரிந்தவை மணல் அல்லது தூசிக் குவியலாக இருக்கலாம் என புதிய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘செவ்வாயின் மேற்பரப்பில் கருமையான கோடு களாக நிழல் போலத் தெரிந்தவை தண்ணீராக இருக்க வாய்ப்பில்லை. மண் அல்லது தூசி குவியலாக இருக்கலாம். செவ்வாய்க் கிரகத்தின் துருவப் பகுதி மற்றும் கெட்டியான தாதுக்களில் ஈரம் இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தாலும், முன்பு கூறப்பட்டதுபோல் அங்கு அதிகளவிலான தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு’ என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நேச்சர் ஜியோ சயின்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில், ‘செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் மாறி மாறி ஏற்படும் மண் குவியல், பள்ளம் ஆகியவை, அங்கு நீர் வளம் உள்ளது என்பதற்கு முரணாக உள்ளன. செவ்வாயில் உள்ள மணல்தான் இந்தக் குவியலை ஏற்படுத்துகிறது. தண்ணீர் இருந்தால் இதுபோன்ற மாற்றம் நிச்சயம் ஏற்படாது’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, செவ்வாய்க் கிரகத்தில் மனிதக் குடியேற்ற முயற்சிகளுக்குப் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.

Next Story