கிரிக்கெட் விளையாடியபோது பந்து தாக்கியதில் மாணவன் சாவு தலையில் ஹெல்மெட் அணியாததால் பரிதாபம்
காயல்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கியதில் மாணவன் உயிரிழந்தான்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கியதில் மாணவன் உயிரிழந்தான்.
9–ம் வகுப்பு மாணவன்தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மரைக்கார் தெருவைச் சேர்ந்தவர் பிலால் அமீன். ஆட்டோ டிரைவரான இவருடைய மனைவி முத்து பீவி. இவர்களுடைய மகன் முகமது உமர் (வயது 14). இவன் ஆறுமுகநேரியை அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் வழக்கம்போல் முகமது உமர் தனது வீட்டுக்கு சென்றான். பின்னர் அவன் தனது வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினான். முகமது உமர் பேட்டிங் செய்தபோது, தலையில் ஹெல்மெட் அணியாமல் விளையாடினான்.
தலையில் பந்து தாக்கியதில்...அப்போது பவுலர் வேகமாக வீசிய பந்து, முகமது உமரின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவன் மைதானத்திலேயே மயங்கி விழுந்து சரிந்தான். உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் முகமது உமரை காயல்பட்டினத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகமது உமர் இறந்ததாக தெரிவித்தனர். பின்னர் அவனது உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையே மாணவன் முகமது உமர் இறந்தது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கியதில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.