தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3½ லட்சம் இழப்பீடு


தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3½ லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 10 Dec 2017 3:45 AM IST (Updated: 10 Dec 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

தனியார் அரிசி ஆலை விபத்தில் பலியான தொழிலாளி குடும்பத்துக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் 29 நாளில் தீர்வு காணப்பட்டு ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

திண்டிவனம்,

திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இதில் முதன்மை சார்பு நீதிபதியும், சட்டப் பணிகள் குழு தலைவருமான காயத்ரி தலைமையில் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பரணிதரன், 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அருணாசலம், கூடுதல் சார்பு நீதிபதி ஹெர்மிஸ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேசன், மக்கள் நீதிமன்ற நீதிபதி துளசிமோகன்தாஸ், 1-வது நீதிமன்ற நடுவர் தாவூத்அம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் திண்டிவனம் அருகே இறையானூரில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கடந்த மாதம் 11-ந்தேதி நடந்த விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மஞ்சத்பிரசாத் என்ற தொழிலாளி பலியான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டு, தீர்வு காணப்பட்டது. இதையடுத்து விபத்தில் இறந்த மஞ்சத்பிரசாத்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.3½ லட்சத்துக்கான காசோலையை நீதிபதிகள் வழங்கினர். இதன் மூலம் அரிசி ஆலை விபத்தில் 29 நாளிலேயே மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர 61 வாகன விபத்து வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 95 லட்சத்து 62 ஆயிரத்து 652 -க்கான காசோலை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகளும் சமரசம் செய்யப்பட்டது.

இதில் பார் அசோசியேஷன் தலைவர் சங்கரன், செயலாளர் பாலாஜி, லாயர் வெல்பர் அசோசியேஷன் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் கிருபாகரன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் தேசிங்கு, செயலாளர் சிவக்குமார், வக்கீல்கள் சங்கரன், தேவக்குமார், ஆதித்தன், விஜயன், முருகன், கோகுல்தாஸ், அருணகிரி, சேகர், அரிராமன், ரமேஷ், அஜ்மத்அலி, சந்திரகுமார் உள்ளிட்ட வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிக்குழு உதவியாளர் நஸ்ரீன் செய்திருந்தார்.

Next Story