விருத்தாசலத்தில்: தொழிலாளியை கொன்று உடல் தீ வைத்து எரிப்பு


விருத்தாசலத்தில்: தொழிலாளியை கொன்று உடல் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2017 6:00 AM IST (Updated: 10 Dec 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தொழிலாளியை கொன்று உடலை தீவைத்து எரித்த பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் ஜம்புலிங்கம்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு கசந்தாமணி(30) என்ற மனைவியும், காவியா(8), அவந்திகா(4) என்ற இரு மகள்களும் உள்ளனர். ஜம்புலிங்கத்தின் மீது மந்தாரக்குப்பம், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது ஜம்புலிங்கம் தனது குடும்பத்தினருடன், மேட்டுக்குப்பத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குப்பநத்தம் நல்லூரில் உள்ள தனது பெரியம்மா மகனான தனியார் பஸ் டிரைவர் கண்ணனை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் ஜம்புலிங்கம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜம்புலிங்கத்தை, கண்ணன் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) பாண்டியன், இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் ஜம்புலிங்கத்தின் உடல் இல்லை. இதையடுத்து, போலீசார் அங்கு விசாரித்த போது, கண்ணனின் வீட்டின் முன்பு ரத்தக்கறை படிந்து இருந்தது. ஆனால் வீட்டில் கண்ணன் இல்லை.

இதன் மூலம், ஜம்புலிங்கத்தை கொலை செய்து, அதை மறைக்கும் வகையில் உடலை எங்கோ புதைக்க கண்ணன் எடுத்து சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அதன்பேரில் தொடர்ந்து கிராமத்தில் முகாமிட்டு கண்ணனை தேடி வந்தனர்.

இதற்கிடையே கண்ணன் விருத்தாசலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, கண்ணனை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

அப்போது ஜம்புலிங்கம் பற்றி அவரிடம் போலீசார் விசாரித்த போது, ஜம்புலிங்கத்தை கொலை செய்து, அவரது கை கால்களை கட்டினேன். பின்னர் ஒரு சாக்குமூட்டையின் உள்ளே உடலை வைத்து கட்டி, நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் பெரியவடவாடியில் உள்ள விருத்தாசலம் நகராட்சி குப்பை கழிவுகள் கொட்டும் மைதானத்தில் குப்பையோடு குப்பையாக போட்டு தீ வைத்து எரித்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கண்ணனை போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அப்போது ஜம்புலிங்கத்தின் உடல் எரிக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். அங்கு ஜம்புலிங்கத்தின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் கண்ணனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story