மரப்பாலத்தை அகற்றியதை கண்டித்து மருதூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


மரப்பாலத்தை அகற்றியதை கண்டித்து மருதூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

மரப்பாலத்தை அகற்றியதை கண்டித்து மருதூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

குளித்தலை,

மருதூர் பேரூராட்சிக்குட் பட்ட 7-வது வார்டு பகுதியில் தென்கரை வாய்க்காலில் மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் இந்த பாலம் இருந்தது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். பொதுகழிப்பிட வசதி இல்லாததால் இந்த பாலத்தை கடந்து ஆற்றுப்பகுதியில் சென்று பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழித்து வந்தனர்.

இந்த நிலையில் பாலத்தின் அடிப்பகுதியில் கல்தூணில் வாய்க்காலில் வந்த குப்பைகள் தேங்கியது. சில கல்தூண்கள் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் பாலம் சற்று தொங்கியபடி இருந்தது. இதனையடுத்து அந்த மரப்பாலத்தை பேரூராட்சி அதிகாரிகள் திடீரென அகற்றிவிட்டனர். அதன்பின் புதியதாக பாலம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி நிலை உள்ளது. பாலம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் மரப்பாலம் அகற்றப்பட்டதை கண்டித்தும், உடனடியாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் 7-வது வார்டு பொதுமக்கள் நேற்று மருதூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் வாசல் முன்பு தரையில் அமர்ந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் பொதுமக்களிடம் பேசினார். பேச்சுவார்த்தையில், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story