பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:30 AM IST (Updated: 10 Dec 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் தனியார் பஸ்பாடி கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

கரூர்,

கரூரில், கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பம்பாளையம் பகுதியில் தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் பஸ்பாடி கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், கோட்ட அலுவலர் அப்துல்பாரி தலைமையில் நிலைய அலுவலர் ராஜகோபால் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நிறுவனத்தின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் தீ பிடிக்காமல் இருக்க அதன் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பஸ்பாடி கட்ட பயன்படுத்தப்படும் மரப்பலகைகள், இருக்கைகளுக்கான கவர்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. மேலும் பொருட்கள் இருந்த அறையின் மேற்கூரை பாதி சரிந்து கீழே விழுந்தது. தீயின் வெப்பத்தால் சுவரிலும் வெடிப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story