டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கழிவுநீர் வடிகாலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கழிவுநீர் வடிகாலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:30 AM IST (Updated: 10 Dec 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி நகரில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கழிவுநீர் வடிகாலில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கழிவுநீர் வடிகால்கள் சீரமைப்பு, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இந்தநிலையில் அப்பகுதி கழிவுநீர் வடிகால்களில் கற்கள் மற்றும் சிமெண்டு கட்டைகள் கொண்டு மூடப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கிய நிலையில் இருந்தது. இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வடிகால்களில் மீது செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வருகிறது. இதையடுத்து வீரமாகாளியம்மன் கோவில் தெரு, அங்காளம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வடிகால்களில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கற்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

உதவி கலெக்டர் ஆய்வு

கீரமங்கலம் பகுதிக்கு வந்த உதவி கலெக்டர் கே.எம்.சரயு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென அங்குள்ள ஒரு திரையரங்கத்திற்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கேண்டீன், கழிவறை, டிக்கெட் கொடுக்கும் இடம், பார்வையாளர்கள் அமரும் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் திரையரங்கத்தில் தொடர்ந்து சுகாதாரம் கடைப்பிடிக்க வேண்டும். டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் கண்டறியப்பட்டால் நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். முன்னதாக கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் முன்பு உதவி கலெக்டர் கே.எம்.சரயு மரக்கன்றுகளை நட்டார். 

Next Story