மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். கலெக்டர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் பேசியதாவது:-

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுவரையறை செய்வதற்கான பணியில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்டவாறு பணியை மேற்கொள்ள வேண்டும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலும், குடியிருப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் வார்டுகளில் மறுவரையறை பணியை உரிய விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் மற்றும் இதர பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பாளர்கள் முன்பு செலுத்திய டெபாசிட் தொகையில் திருப்பி வழங்காமல் உள்ள தொகையை வேட்பாளர்களுக்கு திருப்பி வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க சில அலுவலர்கள் காலதாமதமாக வந்தனர். இதை கவனித்த மாநில தேர்தல் ஆணையர், காலதாமதத்தை தவிர்த்து உரிய நேரத்தில் கூட்டத்தில் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தின் முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கூடிய அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு பெட்டிகள் மற்றும் தளவாட பொருட்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் முதன்மை தேர்தல் அலுவலர் ஸ்ரீசம்பத்குமார், உள்ளாட்சி தேர்தல் ஆலோசகர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி கலெக்டர்கள் ராமமூர்த்தி, கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story