தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை மலேசியாவில் இருந்து கர்நாடகத்திற்கு 52 ஆயிரம் டன் மணல் இறக்குமதி


தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை மலேசியாவில் இருந்து கர்நாடகத்திற்கு 52 ஆயிரம் டன் மணல் இறக்குமதி
x
தினத்தந்தி 10 Dec 2017 3:00 AM IST (Updated: 10 Dec 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

மணல் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் மலேசியாவில் இருந்து கர்நாடகத்திற்கு மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.

பெங்களூரு,

மணல் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் மலேசியாவில் இருந்து கர்நாடகத்திற்கு மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக மலேசியாவில் இருந்து 52 ஆயிரம் டன் மணல் சரக்கு கப்பல் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூரு புதிய துறைமுகத்தை வந்தடைந்தது.

மணல் தட்டுப்பாட்டை போக்க...

கர்நாடகத்தில் மணல் குவாரிகள் அதிக அளவில் செயல்பட்டு வந்தன. மேலும் மணல் கொள்ளைகளும் நடந்து வந்தன. இதனால் கனிம வளங்கள் குறையும் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநிலத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் மணல் குவாரிகள் மூடப்பட்டன.

மேலும் மணல் திருட்டை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையடுத்து சில இடங்களில் புதிதாக மணல் குவாரிகளை அமைத்துக் கொள்ள மாநில அரசு அனுமதித்தது. இருந்தபோதிலும் மணல் தட்டுப்பாட்டை முழுமையாக போக்க முடியவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய மாநில அரசு முடிவு செய்தது.

52 ஆயிரம் டன்

அதன்பேரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் 5 லட்சம் டன் மணலை இறக்குமதி செய்ய மாநில அரசு திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. அதன்படி முதல்கட்டமாக மலேசியாவில் இருந்து கடந்த மாதம்(நவம்பர்) 29–ந் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரு புதிய துறைமுகத்திற்கு 52 ஆயிரத்து 129 டன் மணலுடன் சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. அந்த கப்பல் நேற்று மங்களூரு புதிய துறைமுகத்தை வந்தடைந்தது.

இதுகுறித்து துறைமுக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மலேசியாவில் இருந்து கர்நாடகத்திற்கு சரக்கு கப்பல் மூலம் 52 ஆயிரத்து 129 டன் மணல் வந்துள்ளது. இந்த மணல் இன்னும் 3 நாட்களில் 2,483 லாரிகள் மூலம் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட இருக்கிறது’’ என்று கூறினார்.


Next Story