மூடிகெரே அருகே, ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பிறந்த சிறிது நேரத்தில் ஆண் குழந்தை இறந்தது
ஆம்புலன்ஸ் வராததால், ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து ஆண் குழந்தை பிறந்தது.
சிக்கமகளூரு,
ஆம்புலன்ஸ் வராததால், ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தை இறந்ததால், அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
குழந்தை இறந்ததுசிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் அருகே உள்ள மாகோடு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். தொழிலாளி. இவரது மனைவி ரத்னா(வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரத்னாவுக்கு நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் ஆல்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு, தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் அனுப்பும்படி கேட்டு உள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் ரத்னா பிரசவ வலியால் அலறி துடித்தார். இதையடுத்து ரத்னாவை, மகேஷ் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரத்னாவுக்கு ஆட்டோவில் வைத்து ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஆஸ்பத்திரி முற்றுகைஇதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ், தனது உறவினர்களுடன் ஆல்தூர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இந்த போராட்டம் பற்றி அறிந்த தாலுகா மருத்துவ அதிகாரி ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மகேஷ், ஆம்புலன்ஸ் வராததால் தான் எனக்கு பிறந்த குழந்தை இறந்து போனது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை அதிகாரியும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மகேசும் அவரது உறவினர்களும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஆஸ்பத்திரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.