அரசியல் ஆதாயத்துக்காகவே ‘மோடி தனது சாதியை பயன்படுத்துகிறார்’ நானா பட்டோலே கடும் தாக்கு


அரசியல் ஆதாயத்துக்காகவே ‘மோடி தனது சாதியை பயன்படுத்துகிறார்’ நானா பட்டோலே கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 Dec 2017 4:00 AM IST (Updated: 10 Dec 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் ஆதாயத்துக்காகவே மோடி தனது சாதியை பயன்படுத்துவதாக பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய நானா பட்டோலே தெரிவித்தார்.

நாக்பூர்,

அரசியல் ஆதாயத்துக்காகவே மோடி தனது சாதியை பயன்படுத்துவதாக பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய நானா பட்டோலே தெரிவித்தார்.

நானா பட்டோலே ராஜினாமா

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, பாரதீய ஜனதா சார்பில் தான் வகித்து வந்த எம்.பி. பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் பண்டாரா– கோண்டியாவை சேர்ந்த நானா பட்டோலே நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, நாக்பூரில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துக்கு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, தான் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர் என்பதற்காக தன்னை இழிவுபடுத்தி மணிசங்கர் அய்யர் கருத்து கூறியதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த இரட்டை வேடம் உண்மையில் எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

மோடி சத்தம் போட்டார்

கடந்த ஆண்டு பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பின்தங்கிய பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகளை நான் முன்வைத்தேன். மேலும், பின்தங்கிய பிரிவினருக்கு தனிப்பட்ட அமைச்சகம் ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தேன். ஆனால், மோடி என்னை பார்த்து சத்தம்போட்டு, பின்தங்கியவர்களுக்கு தனி அமைச்சகம் தேவை இல்லை என்றார்.

இப்போது, பிரதமர் தனது பின்தங்கிய சாதி சான்றை முன்னிலைப்படுத்தி, அரசியல் ஆதாயத்துக்காக ஓட்டு கேட்கிறார். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி அரசுக்கு கவலையே இல்லை. நாட்டு மக்களை பிரதமர் மோடி வஞ்சிக்கிறார்.

ஆமதாபாத்தில் சுற்றுப்பயணம்

ஆமதாபாத்தில் திங்கட்கிழமை (அதாவது நாளை) சுற்றுப்பயணம் செய்து, மோடியின் இரட்டை வேடத்தை முன்னிலைப்படுத்துவேன். என்னுடைய தொகுதியான பண்டாரா– கோண்டியாவில் வருகிற 15, 16–ந் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.

இவ்வாறு நானா பட்டோலே தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக காங்கிரசில் சேர போகிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘எந்த கட்சியிலும் சேருவது பற்றி இன்னமும் முடிவு எடுக்கவில்லை’’ என்று அவர் பதில் அளித்தார்.


Next Story