சிலிர்க்கவைத்த தெய்வீகப் பயணம்..


சிலிர்க்கவைத்த தெய்வீகப் பயணம்..
x
தினத்தந்தி 10 Dec 2017 8:38 AM IST (Updated: 10 Dec 2017 8:38 AM IST)
t-max-icont-min-icon

கான கந்தர்வன் ஜேசுதாஸ் பக்தி நிறைந்தவர். அவருடன் குடும்ப வாழ்க்கையிலும், இசை வாழ்க்கையிலும், ஆன்மிக வாழ்க்கையிலும் இரண்டற கலந்தவர் மனைவி பிரபா ஜேசுதாஸ்.

கான கந்தர்வன் ஜேசுதாஸ் பக்தி நிறைந்தவர். அவருடன் குடும்ப வாழ்க்கையிலும், இசை வாழ்க்கையிலும், ஆன்மிக வாழ்க்கையிலும் இரண்டற கலந்தவர் மனைவி பிரபா ஜேசுதாஸ். சபரிமலைக்கு சென்று ஐயப்ப சாமியை வழிபட வேண்டும் என்ற அவரது நீண்ட கால ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது. முதல் பயண நினைவுகளை நிறைந்த மனதோடு அவர் பகிர்ந்துகொள்கிறார்.

“தெய்வ காரியங்களை கணக்குவைக்க முடியாது என்று தாசேட்டன் (ஜேசுதாஸ்) சொல்வார். பல வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை மகன்களையும் அழைத்துக்கொண்டு சபரிமலை செல்ல அவர் தயாரானார். மாலையணிந்து, விரதமிருந்து பக்திபூர்வமாக அந்த நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. அப்போது ஐயப்பசாமியை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் உருவானது. எங்களுக்கு திருமணமானதில் இருந்து, என் கணவர் பாடிய ஐயப்ப சாமி பக்திப் பாடல்கள் எல்லாம் எனக்கும் மனப்பாடமாகிவிட்டது. அவரை கைப்பிடித்த நாளில் இருந்து அவரது இசைப் பயணத்தில் மட்டுமல்ல, ஆன்மிக பயணத்திலும் நான்தான் துணையாக இருக்கிறேன்.

ஒரு சக்தியின் பல்வேறு வகைகள்தான் அனைத்து தெய்வங்களும் என்று என் பெற்றோர் எனக்கு கற்றுத்தந்திருக்கிறார்கள். எனது தாத்தா நன்றாக ஆர்மோனியம் வாசிப்பார். அவர் ஏழு வயதில் இருந்தே என்னை ஐயப்ப சாமியின் பாடல்களை பாடவைப்பார். கீர்த்தனைகள், சினிமா பாடல்கள் மட்டுமின்றி எல்லா மதத்தை சேர்ந்த பாடல்களையும் அப்போதே நான் பாடுவேன். எல்லா மதங்களுக்கும் மரியாதை செலுத்தவும், எல்லோர் மீதும் அன்பு செலுத்தவும் சிறுவயதிலே நான் கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டின் அருகில் ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்தது. அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோரை எப்படி அழைக்குமோ அதுபோல் நானும் அப்போது என் பெற்றோரை அழைத்தேன். அருகிலே இந்துக் குடும்பத்தினரும் வசித்தார்கள். நாங்கள் ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஓணம் எல்லாவற்றையும் சேர்ந்தே கொண்டாடுவோம்.

தாசேட்டனின் தந்தை அகஸ்டின் ஜோசப் மூகாம்பிகை, சபரிமலை பக்தர். பழைய சபரிமலை கோவில் இருந்த காலகட்டத்தில் ஒரு தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு நடந்தபோது, குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் விரதம் இருந்து சபரிமலை சென்றுவிட்டார். பின்பு யாரோ கூறிய பின்புதான் தாசேட்டனுக்கே அது தெரிந்தது..” என்று கூறும் பிரபா, ஜேசுதாசின் முதல் சபரிமலை பயணம் பற்றிய தகவலையும் பகிர்ந்துகொள் கிறார்.

“அவர் மியூசிக் அகாடமியில் படித்துக்கொண்டிருந்தபோது திருப்பணித்துறையில் உள்ள ஒரு கோவிலில் மதுரை மணி அய்யரின் கச்சேரி நடந்தது. அவர் கச்சேரியை காண விரும்பினார். ஆனால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. அவர் வருத்தத்தோடு வெளியே நின்று கச்சேரியை கேட்டிருக்கிறார். அப்போது நிறைய பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷம் எழுப்பியபடி சென்றிருக்கிறார்கள். அதை பார்த்து அவருக்கும் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. பின்பு அவர், இந்து அல்லாத தான் சபரி மலைக்கு வர விரும்புவதாக அப்போதைய கோவில் அதிகாரிக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டிருக்கிறார். எந்த மதத்தை சேர்ந்தவரும் வரலாம். விரதம் இருந்து, இருமுடிகட்டி பதினெட்டாம் படி ஏறி வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அப்போது பெற்றோ ருக்குகூட தெரிவிக்காமல் ஆச்சரப்படி அவர் சபரிமலை சென்றிருக் கிறார். அன்று முதல் ஐயப்ப சாமி தாசேட்டனுக்கு இஷ்ட தெய்வமாகிவிட்டார்.

எங்கள் திருமணம் நடந்த பின்பு அவரது இசைப் பயணத்தில் நானும் பங்குபெற்றேன். அப்போது குழந்தைக்காக நாங்கள் வெகுகாலம் காத்திருக்கவேண்டியதாகிவிட்டது. இன்னும் குழந்தை இல்லையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது ரொம்ப கடினமாக இருந்தது. மருத்துவ பரிசோதனையில் எங்கள் இரு வருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்தது. கடவுள் அனுக்கிரகம்தான் கடைசி வழி என்று கோவில், தேவாலயம் எல்லாம் சென்றோம். அப்போது தாசேட்டன் சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தார். எல்லா வருடமும் மூகாம்பிகை சென்றும் வழிபட்டார்.

ஏழு வருட காத்திருப்புக்கு பிறகு வினோத் பிறந்தான். அப்போது தாசேட்டன் மூகாம்பிகையில் இருந்தார். அடுத்து விஜய், பின்பு விஷால் பிறந்தார்கள். விஜய் வாழ்க்கையில் தர்ஷனாவும், விஷால் வாழ்க்கையில் வினயாவும் இணைந்தார்கள். பேரன், பேத்திகளும் பிறந்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணாநகர் ஐயப்பசாமி கோவிலில் அரிவராசனம் பாடலை தாசேட்டன் பாடியபோது, ஒருவர் வந்து, இரண்டாவது வரியில் ஒரு உச்சரிப்பு பிழை இருக்கிறது. ‘அருவிமர்தனம்’ என்பதல்ல ‘அரி-விமர்தனம்’ என்பதே சரியான உச்சரிப்பு . அரி என்றால் சத்ரு, அரிவிமர்தனம் என்றால் சத்ருக்களை ஒழிக்கும் ஐயப்பன் என்று பொருள் என்றார். அன்றிலிருந்து அந்த உச்சரிப்பை சரிசெய்து தாசேட்டன் பாடுகிறார். சபரிமலையில் அன்றாட பூஜைகள் நிறைவடைந்த பின்பு ஐயப்பனை பாடி தூங்கவைக்கும் அந்த பாடலை சரியாக பாடி ரிக்கார்ட் செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளது.

பல வருடங்களாக சபரிமலை சென்று கொண்டிருந்த தாசேட்டன் 2004-ம் ஆண்டு நிறுத்தினார். அதற்கு மலை ஏற முடியாத அவரது உடல் நிலை காரணம். டோலியில் சென்று அவர் தரிசனம் செய்யவும் விரும்பவில்லை. பின்பு 2012-ம் ஆண்டு மலைக்கு சென்றார். அரைகுறை மனதோடு பம்பையில் இருந்து சன்னிதானம் வரை டோலியில் சென்றார். ஐயப்பன் விருப்பம் அதுதான் என்று ஏற்றுக்கொண்டார். அன்று முதல் எனக்கும் ஐயப்பனை தரிசிக்கும் ஆசை வந்தது. சமீபத்தில்தான் அது நிறைவேறியிருக்கிறது.

கோட்டயத்தில் வைத்து மாலை அணிந்தேன். இருமுடி கட்டிய பின்பு காரில் பயணப்பட்டோம். வழக்கமான முறைப்படி தொழுதுகொண்டு சன்னிதானத்தை அடைந்தோம். வழிபட்டோம். தாசேட்டன் அரிவராசனம் பாடினார். காதுகுளிர கேட்டேன். சன்னிதானத்துக்கு சென்றால் மீண்டும் மீண்டும் தரிசிக்கும் ஆசைதான் எல்லோருக்கும் வரும்..” என்று நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறார், பிரபா ஜேசுதாஸ்.

Next Story