பெண் அழகைப் போற்றுவோம்


பெண் அழகைப் போற்றுவோம்
x
தினத்தந்தி 10 Dec 2017 11:04 AM IST (Updated: 10 Dec 2017 11:04 AM IST)
t-max-icont-min-icon

“பெண்களின் திறமையை பாராட்டுவதுபோல் அவர்களது அழகையும் புகழவேண்டும். ‘நீங்க இன்றைக்கு பார்க்க ரொம்ப அழகாக இருக்கீங்க! இந்த உடை உங்களுக்கு சூப்பராக இருக்கிறது’

“பெண்களின் திறமையை பாராட்டுவதுபோல் அவர்களது அழகையும் புகழவேண்டும். ‘நீங்க இன்றைக்கு பார்க்க ரொம்ப அழகாக இருக்கீங்க! இந்த உடை உங்களுக்கு சூப்பராக இருக்கிறது’ என்று குடும்பத்தினர் பெண்களிடம் சொன்னால், அவர்கள் மறுநாள் கூடுதல் கவனம் செலுத்தி அதிக அழகோடு ஜொலிப்பார்கள். அப்பாவும், கணவரும் பெண்களின் அழகை அதிகம் பாராட்டவேண்டும். ஒரு பெண்ணின் அழகை இன்னொரு பெண்ணே பாராட்டினால், அவள் அந்தரத்தில் பறக்கத் தொடங்கிவிடுவாள். அந்த நாள் முழுவதும் உற்சாகத்தில் மிதப்பாள். அழகால் பாராட்டுப் பெறும் பெண்கள் திறமையிலும் சிறந்தவர்களாக விளங்குவார்கள்” என்று கூறும் திரிபுரசுந்தரிக்கு வயது 28. பெண்களின் அழகைப் போற்றச் சொல்லும் இவர், “நான் உடைகளை தேர்வு செய்து அணியும் நேர்த்தியைப் பார்த்து அழகாக இருப்பதாக என் தந்தை பாராட்டியதால்தான், நான் அதில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அந்த பாராட்டுகளை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள ஆசைப்பட்டதோடு, என்னை சார்ந்த பெண்களுக்கும் அதுபோல் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று விரும்பி, அதற்காக பேஷன் டிசைனிங் துறையை தேர்ந்தெடுத்தேன்..” என்கிறார்.

திரிபுரசுந்தரி வித்தியாசமாக ஆடை உடுத்தி எப்போதும் பளிச்சென காணப்படுகிறார். அந்த ஆடைக்கு பொருத்தமாக ஆபரணங்களும் அணிகிறார். எப்போதும் சுறுசுறுப்பாகவும், புன்னகையோடும் வலம் வருகிறார். இவர் சினிமா நடிகர், நடிகைகளுக்கும், டி.வி. தொடர் நாயகிகளுக்கும் ஆடை வடிவமைப்பு செய்கிறார். அவர் பெண்களின் அழகு பற்றி நம்மிடம் பேசுகிறார்:

உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்றது ஆடை வடிவமைப்பு துறைதான் என்ற முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்?

“எனது தந்தை துரைபாண்டியனும், தாயார் சாந்தியும் பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அவைகளில் எல்லாம் ஈடுபட அனுமதித்தார்கள். அதனால் நான் 7 வயதிலே நடனத்தில் தேர்ச்சி பெற்றேன். அதில் பரிசுகளும் வாங்கினேன். 14 வயதில் இருந்து பள்ளி நாடகங்களில் நடித்து பாராட்டு பெற்றேன். எனக்கு சிறு வயதில் இருந்தே வித்தியாசமாக, நேர்த்தியாக உடைகள் அணியப் பிடிக்கும். அதை என் பெற்றோரும் ரசித்து வரவேற்றார்கள். சிறுவயதில் இருந்தே எனக்கான உடைகளை நானே தேர்ந்தெடுப்பேன். அவை மற்றவர்கள் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

எனது தந்தை புத்தக வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். உலகில் உள்ள சிறந்த புத்தகங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து படிப்பார். நிறைய புத்தகங்கள் சேகரித்தும் வைத்திருந்தார். அவர் விரும்பிப் படித்த புத்தகங்களில் இருக்கும் சிறந்த கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்வார். அவைகளில் இந்திய கலை-கலாசாரம் பற்றிய புத்தகம் என்னை வெகுவாக கவர்ந்தது. அதில் இந்திய ஆடைகளின் வரலாறும், சிறப்பும் அற்புதமாக விளக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த துறையிலே ஈடுபட முடிவு செய்தேன். அதற்கான அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வதற்காக, பிளஸ்-டூ படித்து முடித்ததும், கோத்தாரி அகாடமியில் சேர்ந்து பேப்ரிக் பெயிண்டிங் கற்றேன். அதில் நன்றாக தேர்ச்சி பெற்ற பின்பு பேர்ல் அகாடமியில் சேர்ந்து ஆடை வடிவமைப்பு பற்றி படித்தேன். படித்துக் கொண்டிருந்தபோதே டெலிவிஷன் நடிகைகளுக்கு ஆடை வடிவமைத்துக்கொடுத்தேன். ஆடை மூலம் எல்லா பெண்களையும் அழகாக்கும் ரகசியத்தை நான் கற்றுக்கொண்டதால், இந்த துறை எனக்கு மிகவும் பிடித்தமானதாகிவிட்டது.. ”

பெண்கள் அதிக அழகுடன் ஜொலிக்க என்ன தேவை என்று கூறுகிறீர்கள்?

“நம்பிக்கைதான் பெண்களுக்கு கூடுதல் அழகு தரும். விலை உயர்ந்த ஆடை அணிந்தாலும், விலை மதிப்பற்ற நகைகள் அணிந்தாலும், ‘இவை எனக்கு அதிக அழகைத் தருகிறது. நான் மிக அழகாக இருக்கிறேன்’ என்ற நம்பிக்கை உருவாகவேண்டும். எளிமையான, நேர்த்தியான உடையோடு நம்பிக்கையும் கலந்தால் அந்த பெண் அழகாக ஜொலிப்பாள். அதனால்தான் சில பெண்கள் நைட்டியில்கூட சூப்பராக தோன்றுகிறார்கள்”

கல்யாணத்துக்கு முன்பு பெண்கள் ஆடை, அணிகலன்களில் அதிக முனைப்புக் காட்டி மிக அழகாக தோன்ற ஆசைப்படுகிறார்களே, அதற்கு என்ன காரணம்?

“அப்போது இளமை பெண்களிடம் ஊஞ்சலாடும். பொறுப்புகள் அதிகம் இருக்காது. தன்னை அழகுபடுத்த அதிக நேரம் கிடைக்கும். மற்றவர்களை கவரும் விதத்தில் தன் அழகு இருக்கவேண்டும் என்று நினைத்து அதற்காக ரொம்ப மெனக்கெடுவார்கள். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தனது வருங்கால மனைவி பற்றி ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகளுக்கு ஏற்ற கதாநாயகிகளாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லவா..!”

கல்யாணமான தொடக்க காலத்திலும் பெண்கள் அழகில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள் அல்லவா..?

“ஆமாம்! அப்போது ஒரு பெண்ணுக்கு தான் முழுமையடைந்த மகிழ்ச்சியிருக்கும். கணவரும் தன் மனைவி எப்போதும் ‘பிரஷ்’ ஆக இருக்கவேண்டும் என்று விரும்புவார். கூடவே கல்யாணமான புதிதில் கணவரிடம் இருந்து அழகுக்கு பாராட்டும் கிடைத்துக்கொண்டிருக்கும். பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையும்போது கணவர், மனைவியின் கண்ணாடி போன்று மாறிவிடுவார். கணவர் என்ற கண்ணாடியை பார்த்து நம்மை மேலும் அழகுப்படுத்திக்கொள்வதால், திருமணமான புதிதில் பெண்கள் அதிக அழகுடன் காட்சியளிப்பார்கள்”

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் எது?

“என் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான விஷயங்கள் பல உண்டு. ஆனால் மக்களுக்கு பயன்படும் என்பதால் மிக சோகமாக விஷயம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் பேஷன் டிசைனிங் கல்வியை இரண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தபோது என் தந்தை, எங்கள் பண்ணைத் தோட்டத்திற்கு சென்றிருந்தார். காலை நேரத்தில் அங்கு அவரை பூச்சி ஒன்று கடித்திருக்கிறது. சிறிய பூச்சிதானே என்று என் தந்தை அலட்சியப்படுத்திவிட்டார். இரவில் காய்ச்சல் வந்தது. மறுநாள் காலை சிறுநீரகம் செயலிழந்தது. பின்பு ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல், பூச்சி கடித்த 36 மணி நேரத்தில் என் தந்தை இறந்துவிட்டார். சிறிய பூச்சி கள்கூட மிகுந்த விஷத்தன்மை கொண்டதாக இருப்பதால், யாரும் அலட்சியம் காட்டிவிட வேண்டாம் என்பதற்காக இதை சொல்கிறேன்”

(திரிபுரசுந்தரிக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. அவர் நகை வடிவமைப்பாளரான வெங்கடேஷை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். மூன்று வருடங்கள் காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பின்பு திருமணம் செய்திருக்கிறார்கள். சென்னையில் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். திரிபுரசுந்தரிக்கு ரம்யா பாண்டியன் என்ற தங்கையும், பரசுராம் பாண்டியன் என்ற தம்பியும் உள்ளனர்)

திருமணத்திற்கு பிறகு பெண்கள் அழகில் அக்கறை செலுத்துவதை ஏன் குறைத்துக்கொள்கிறார்கள்?

“திருமணத்திற்குப் பிறகு கணவர், மாமனார், மாமியார், குழந்தை என்று குடும்பம் பெரிதாகிவிடுகிறது., அதனால் குடும்பத்தை கவனிக்கவே தனது 85 சதவீத நேரத்தை பெண்கள் செலவிட்டுவிடுகிறார்கள். தனக்காக 15 சதவீத நேரத்தை தான் அவர்களால் ஒதுக்க முடிகிறது. அதனால் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவதில்லை. உடற் பயிற்சி செய்வதில்லை. தனக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. என்னிடம் ஆடை வடிவமைக்கச் சொல்லும் பெண்களிடம் நான் அவர்களது உடல் நலம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறேன். குடும்பத்தலைவிகளின் அழகிலும், ஆரோக்கியத்திலும் அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் அக்கறைகாட்டவேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பமே அழகாக இருக்கும்”

நீங்கள் மகிழ்ச்சிக்காக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

“நான் கற்றுக்கொண்ட ஆடை வடிவமைப்புக் கலையால் என்னை அழகாக்கி மகிழ்ச்சியடைகிறேன். என்னை சார்ந்தவர்களுக்கும் புதுவித பொருத்தமான ஆடைகளை வடிவமைத்துக்கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துகிறேன். இந்த மகிழ்ச்சியோடு ஆத்ம திருப்தியையும் பெறுவதற்காக நான் உருவாக்கியிருக்கும் புஷ்பம் டிசைனர் பொட்டிக் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு எம்ப்ராய்டரிங் கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்க திட்டமிட்டிருக்கிறேன். எம்ப்ராய்டரிங் கலையில் மாற்றுத்திறனாளிகளால் சிறந்து விளங்க முடியும். படிக்கும் காலத்தில் இருந்தே நான் சேவை செய்து வருகிறேன். மனநலன் சரியில்லாதவர்களுக்கு உதவுவதில் நான் அதிக மகிழ்ச்சிகொள்கிறேன்..” என்றார், பேஷன் டிசைனர் திரிபுரசுந்தரி.

இவரது கலையும், சேவையும் தொடரட்டும்!

Next Story