கண்ணீர் கடலில் மீனவர்கள்


கண்ணீர் கடலில் மீனவர்கள்
x
தினத்தந்தி 10 Dec 2017 2:14 PM IST (Updated: 10 Dec 2017 2:14 PM IST)
t-max-icont-min-icon

கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை சேர்ந்தால்தான், வலையில் வீழ்ந்த மீன்களை விற்று தன் குடும்பத்தை கரை சேர்க்க முடியும்.

டலுக்கு சென்ற மீனவர்கள் கரை சேர்ந்தால்தான், வலையில் வீழ்ந்த மீன்களை விற்று தன் குடும்பத்தை கரை சேர்க்க முடியும். சீறிப்பாயும் கடல் அலையில் சவாரி செய்யும் இவர்களுக்கு, இயற்கையின் சீற்றம் சில நேரங்களில் எமனாகிவிடுகிறது.

எதிர்பாராத வேளையில் இன்னல் தரும் அந்த எமனுக்கு இரையாகி உயிரையும், உபகரணங்களையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் மீனவ குடும்பங்கள் ஏராளம். அங்கே, பிள்ளைகளின் படிப்பு பாதியில் கரைந்து போவதும், இளம்பெண்கள் மணமாகாமல் முதிர்கன்னியாய் காலம் தள்ளுவதும், மணமான பெண்கள் விதவைகளாவதும் வேதனையே.

மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க தனி அமைச்சகம் வேண்டும். தாரை வார்த்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது போன்ற மீனவர்களின் பிரதான கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது பல நாள் துயரம்.

இதற்கிடையே, சுழன்றடித்த ஒகி புயல், தன் பங்குக்கு மீனவர்களை கதிகலங்க வைத்து இருக்கிறது. மீனவர்கள் மாயம், சடலமாக மீட்பு, கரை ஒதுங்கிய சடலங்களை அடையாளம் காண முடியாமல் தவிப்பு, படகுகள் மூழ்கடிப்பு என தினசரி செய்திகள் சொல்லொணா துயரத்தை தருகிறது. இந்த புயலால் விவசாயிகளுக்கும் பெருத்த பாதிப்பு. இத்தகைய ஒகி புயலினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் நம் தேசத்து மீனவர்கள், அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தின் தூத்தூர் மண்டலத்து மீனவர்கள் உலகப்புகழ் பெற்றிருக்கிறார்கள். இம்மீனவர்கள், தங்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வேண்டி சில வசதிகளை அரசிடம் மன்றாடி கேட்கிறார்கள்.

தேசிய பேரிடர் மேலாண்மை மையமானது தனது ஒரு கிளையை தூத்தூர் மண்டலத்தில் பொருத்தமான ஒரு இடத்தில் அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று. ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை பார்வையிட வந்த மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, ‘இது நியாயமான கோரிக்கை. மத்திய உள்துறை மந்திரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என அவர் உறுதியளித்தார்.

வானிலை மையத்தின் கிளையும் இப்பகுதிக்கு இன்றியமையாத தேவை. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் ஏற்பட்ட பியான் புயலினால் ஆழ்கடலில் 8 மீனவர்கள் மாயமானார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான நவீன விசைப்படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் மூழ்கடிக்கப்பட்டன. அப்போதே இந்த கேள்வி எழத்தொடங்கியது. வானிலை ஆய்வு மையம் என்ன செய்தது? இந்த இழப்புகளுக்கு பின்னரே கன்னியாகுமரியில் உள்ள வானிலை ஆய்வு மையம் 24 மணிநேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. “கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்” என்பதுதான் அரசின் செயல்பாடாக இருக்கிறது.

தற்போதைய சூழலில், தொலைத்தொடர்பு கருவிகள் (சாட்டிலைட் போன்) வழங்கப்பட்டால் பேருதவியாக இருக்கும் என்பதும் மீனவர்களின் கூற்று. அதாவது கடலில் உள்ள மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அதிகாரிகள் கடலிலுள்ள மீனவர்களையும் தொடர்பு கொள்ளும் வசதியுடன் இந்த கருவி கிடைக்க மீனவர்கள் தவமிருக்கிறார்கள்.

கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையம் வேண்டும் என்பதும் பல ஆண்டுகளாக கேட்கப்படுவதே. ஆழ்கடலில் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் தங்களது நிலைமையையும், விபத்து நடந்த இடத்தையும் எடுத்துக்கூறி உடனடி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, சென்னை மற்றும் மும்பையில் இருப்பதை போன்று கன்னியாகுமரி பகுதியிலும் ஒரு கடலோர மீட்பு மையம் அமைக்க வேண்டும். கடலில் சூறாவளி புயலினால் மீனவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களை உடனடியாக காப்பாற்ற ஒரு ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகுகள் வேண்டும்.

கடலில் ஏற்பட்ட புயலினால் மீனவர்கள் மாயமாகி குடும்ப தலைவனை இழக்கும் மீனவ குடும்பங்களின் ஓலம் இன்றும் நின்றபாடில்லை. உழைப்பின் மறுபெயரென திகழ்கிற ஒரு சமூகம் பல்லாண்டுகாலமாக படும் இன்னல்களையும், அதனால் உருவாகிக் கொண்டிருக்கிற பாதிப்புகளையும் துடைத்தெறிய அரசு முன்வர வேண்டும். கண்ணீர் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை அரசு கரை சேர்க்க வேண்டும்.

“வந்தபின் வருந்துவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது”

- ப.ஜஸ்டின் ஆண்டனி, சர்வதேச மீனவர் வளர்ச்சி அமைப்பு தலைவர், கன்னியாகுமரி. 

Next Story