மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த கோரி கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்


மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த கோரி கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி‘ புயலில் சிக்கி மாயமான மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த கோரி குமரி மாவட்டத்தில் பல்வேறு கடற்கரை கிராமங்களில் நேற்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுக்குள் இறங்கியும் அவர்கள் கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

‘ஒகி‘ புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து குமரி மாவட்டம் இன்னும் மீண்டு வரவில்லை. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் மாயமானதால், கடற்கரை கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன. இதே போல் விவசாய நிலங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளன.

புயலில் சிக்கி மாயமான மீனவர்கள் பலரது கதி என்னவென்று தெரியாமல் உள்ளது. எனவே மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும். புயலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.

இந்தநிலையில், நேற்று முட்டம் பகுதியைச் சேர்ந்த 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக நேற்று காலை 10 மணி அளவில் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் அருட்பணியாளர் பெஸ்காலிஸ், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிகுழு இயக்குனர் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் முட்டம் கடற்கரையில் குவிந்தனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சினிமா நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் உள்பட 15 பேர் கொண்ட குழுவினர் முட்டத்துக்கு வந்து, மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மீனவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையிலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர். அதன்படி சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டம் மதியம் 12 மணி அளவில் வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்பு அனைவரும் கடலில் இருந்து கரைக்கு வந்து, கலைந்து சென்றனர்.

முன்னதாக போராட்டத்தில் கலந்துகொள்ள குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வந்திருந்தார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ராஜாக்கமங்கலம்துறையில் அருட்பணியாளர் ராஜ், ஊர்தலைவர் ஆல்பின் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி கடற்கரையில் மனிதசங்கிலியாக அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர். சற்று நேரத்தில் கடலுக்குள் இறங்கியும் போராட்டம் நடத்தினர்.

மேலகிருஷ்ணன்புதூரை அடுத்த அன்னைநகரில் மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். முன்னதாக ஆலயத்தில் இருந்து அவர்கள் ஊர்வலமாக கைகளில் பதாகைகள் ஏந்தியவாறு கடற்கரைக்கு சென்றனர். அதைதொடர்ந்து கடற்கரையில் மனிதசங்கிலி அமைத்து மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். முடிவில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், கடலில் புயலில் சிக்கி இறந்த மீனவர்களுக்காகவும் பங்குத்தந்தை பாபு ஜெபித்தார். இதில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஆலயத்தில் நடந்த திருப்பலியின் போது ‘ஒகி‘ புயல் நிவாரண நிதி பெறப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக வழங்க கிராமத்தினர் முடிவுசெய்தனர்.

இதே போல் மேலும் பல கடற்கரை கிராமங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பெரியகாட்டில் அருட்பணியாளர் ரொனால்டு ரெக்ஸ் தலைமையிலும், பொழிக்கரையில் ஊர்த்தலைவர் ஜாண்போஸ்கோ தலைமையிலும், கேசவன்புத்தன்துறையில் அருட்பணியாளர் சாம் எப் மேத்யூ தலைமையிலும், புத்தன்துறையில் அருட்பணியாளர் காட்பிரோ தலைமையிலும், பள்ளத்தில் மீனவ சங்க தலைவர் ஏசுநாயகம் மற்றும் பங்குபேரவை செயலாளர் ஆன்டனிராஜ் ஆகியோர் தலைமையிலும் ஏராளமானவர்கள் கடற்கரையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் மனிதசங்கிலியாக நின்றும், கடலுக்குள் இறங்கியும் போராட்டம் நடத்தினர்.

போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டங்களை கைவிட்டு கரைக்கு வந்தனர். மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக கடற்கரை பகுதிகள் நேற்று பரபரப்பாக காணப்பட்டன.


Next Story