தலையை சுவரில் மோதி தாயை கொன்ற மகன் கைது சொத்து தகராறில் கொடூரம்


தலையை சுவரில் மோதி தாயை கொன்ற மகன் கைது சொத்து தகராறில் கொடூரம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:45 AM IST (Updated: 11 Dec 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூர் அருகே சொத்து தகராறில், தலையை சுவரில் மோதி தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

அறச்சலூர்,

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. அவருடைய மனைவி ரத்தினம்மாள் (வயது 61). இவர்களுடைய மகன் பாலசுப்பிரமணி (40). இவர் திருமணம் ஆகி பெற்றோருடன் வசித்து வருகிறார். சொந்தமாக 2 டிராக் டர்கள் வைத்து விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்க பாலசுப்பிரமணி தாய் ரத்தினம்மாள் பெயரில் உள்ள காலி மனையை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு அவரிடம் கூறி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ரத்தினம்மாளுக்கும், பாலசுப்பிரமணிக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி தாய் ரத்தினம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ரத்தினம்மாள் ஈரோடு மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இதுசம்பந்தமாக தாய்க்கும், மகனுக்கும் மறுபடியும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி தாய் ரத்தினம்மாளின் தலையை பிடித்து சுவரில் ஓங்கி அடித்ததாக கூறப் படுகிறது. இதில் ரத்தினம்மாளுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டு வந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலசுப்பிரமணியை வலைவீசி தேடி வந்தார்கள். இந்தநிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாலசுப்பிரமணி நேற்று காலை வடுகப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேல் முன்னிலையில் சரண் அடைந்தார். வெற்றிவேல் அறச்சலூர் போலீசில் பாலசுப்பிரமணியை ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.


Next Story