பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் மும்பைக்கு ரெயிலில் வந்த 4 சிறுமிகள்
பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் மும்பைக்கு ரெயிலில் வந்த சிறுமிகள் 4 பேரை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
மும்பை,
மும்பை அந்தேரி ரெயில் நிலையத்தின் 1–ம் எண் பிளாட்பாரத்தில் நேற்றுமுன்தினம் 4 சிறுமிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். இதை அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கவனித்தனர். இதில், ஒரு சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. ஒரு சிறுமி கைமுறிவுக்காக கட்டுப்போட்டிருந்தாள். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
மீட்கப்பட்ட சிறுமிகள் 4 பேரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். இவர்களது சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலம் மண்டலா ஆகும். அவர்களது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.
இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை. அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறந்தன. ஆண் குழந்தை பிறக்காத கோபத்தில் மேற்படி சிறுமிகள் 4 பேரையும் பெற்றோர் பிச்சை எடுத்து வரும்படி உடல் ரீதியாக கொடுமைபடுத்தி வந்துள்ளனர். இதனால் பெற்றோரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரெயிலில் மும்பை வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறுமிகள் 4 பேரையும் அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிகளின் பெற்றோரை மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.