பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்


பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:15 AM IST (Updated: 11 Dec 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டம் தஞ்சை சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீரையன், மாவட்ட தலைவர் எட்வின் ஆரோக்கியராஜ், மாவட்ட பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களை கல்வித்தகுதி அடிப்படையில் அரசு துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும்.

டாஸ்மாக் கடையை பாதுகாப்பான இடங்களில் கழிவறை வசதியுடன் அமைத்து கொடுக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தை சீரழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது, டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய லாக்கர் அமைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. இந்த பணத்தை வைத்து தான் மக்களுக்கு நலத்திட்டங்களை தமிழகஅரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. டெண்டர் விடப்படாமல் அனுமதியின்றி தமிழகம் முழுவதும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால் தமிழகஅரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி மாதம் திண்டுக்கல்லில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், ரமேஷ், மதியழகன், திருவேங்கடம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, தையல் தொழிலாளர் சங்க தலைவர் மருதகாசி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story