பவானி அருகே வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சாவு


பவானி அருகே வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சாவு
x
தினத்தந்தி 11 Dec 2017 4:15 AM IST (Updated: 11 Dec 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பவானி,

பவானி அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. இவருடைய மகன் சங்கர் பிரபு (வயது 32). விவசாயியான இவர் பவானி ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை சொந்த வேலை விஷயமாக பெருந்துறைக்கு சென்றுவிட்டு பவானிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். டெக்ஸ்வேலி அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சங்கர் பிரபுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கர் பிரபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோதிய வேகத்தில் மோட் டார் சைக்கிள் சுமார் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது.

இதில் மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் மோட்டார்சைக்கிள் எரிந்து நாசம் ஆனது.

உறவினர்கள் கதறல்

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கர் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர்பிரபுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

இறந்த சங்கர் பிரபுவுக்கு திருமணம் ஆகி ரம்யா என்ற மனைவியும், சூர்ய மித்ரா (4) என்ற பெண் குழந்தையும், ரணதீரன் (1) என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள்.

சங்கர்பிரபுவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Next Story