கயத்தாறு அருகே வழிபாட்டுதலம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


கயத்தாறு அருகே வழிபாட்டுதலம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே ஒரு தரப்பினரின் வழிபாட்டுதலம் திறப்பதை கண்டித்து மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிச்சேரி கிராமத்தில் ஒரு பிரிவினர் சுமார் 110 அடி உயரம் கோபுரம் கொண்ட புதிய வழிபாட்டு தலத்தை கட்டியுள்ளனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவு மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த வழிபாட்டுதலம் திறப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர், அதை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 11 மணிக்கு நெல்லை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வில்லிச்சேரிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவந்தி நாராயணன், நகர தலைவர் வேல்ராஜ், பொருளாளர்கள் முனியராஜ், தினேஷ்குமார், விவசாய அணி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பிரச்சினை குறித்து, நாளை (அதாவது இன்று) கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில், நேற்று மாலையில் திட்டமிட்டவாறு அந்த வழிபாட்டு தலம் திறப்புவிழா எளிமையாக நடந்தது. இந்த பிரச்சினையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

Next Story