கவர்னர் கிரண்பெடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
ஆய்வு பணிக்கு சென்ற இடங்களில் கவர்னர் கிரண்பெடியை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக எழுப்பினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக கிரண்பெடி பொறுப்பு ஏற்றது முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்யவிடாமல் தடுக்கிறார். கோப்புகளை திருப்பி அனுப்புகிறார் என முதல்–அமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் கவர்னர் கிரண்பெடி மீது தொடர்ந்து புகார்கள் கூறினர்.
இதனால் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செல்லும் பகுதிகளில் எல்லாம் பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு சரமாரியாக பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
ஊசுடு தொகுதியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொள்வதற்காகவும், பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்றின் விவசாய ஆராய்ச்சி மையத்திற்கும் செல்லவும் நேற்று காலை 7 மணி அளவில் காரில் வந்தார்.இதுபற்றி தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டு சென்று கவர்னரின் காரை மறிக்க முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இருந்தபோதிலும் பொதுமக்கள் கவர்னர் கிரண்பெடியை முற்றுகையிட்டு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தனியார் விவசாய ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற கவர்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். கவர்னர் கூறுகையில், ‘நான் எந்தவொரு திட்டத்தையும் முடக்கவில்லை. மக்கள் நலனுக்காக தான் செயல்படுகிறேன்’ என்றார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்ப அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு தொண்டமாநத்தத்திற்கு புறப்பட்டார். அங்கு சென்று இடிந்து கிடந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார்.இதுபற்றி அறிந்தவுடன் தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கவர்னர் கிரண்பெடியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். அதையடுத்து ஒரு சில நிமிடங்களில் கவர்னரை போலீசார் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.