சரிவர பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து நடைபயண போராட்டம்
பெரியபாளையம் வழித்தடத்தில் சரிவர பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து நடைபயண போராட்டம் நடந்தது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பஸ் டெப்போவில் இருந்து பெரியபாளையம் வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பஸ் டெப்போ கிளை மேலாளருக்கும், டிரைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த வழிதடத்தில் சரிவர பஸ்கள் இயகங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. பல பஸ்கள் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுகிறது.
இது குறித்து இந்த பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை.
இந்த நிலையில், நேற்று பெரியபாளையம் வழித்தடத்தில் சரிவர பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து பெரியபாளையத்தில் இருந்து தாமரைப்பாக்கம் வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் நடைபயண போராட்டம் மேற்கொண்டனர். இதற்கு அனைத்திந்திய மாதர் சங்க திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் பத்மா தலைமை தாங்கினார். மகாலட்சுமி நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், நிர்வாகிகள் சண்முகம், மோகனா, கங்காதரன், ரமா உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் குமார், பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு பஸ் டெப்போவை சேர்ந்த கிளை மேலாளர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். ஆவடி டெப்போ கிளை மேலாளர் சேகர், பாடியநல்லூர் டெப்போ கிளை மேலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் விரைந்து வந்தனர்.
ஒரு வாரத்தில் சரிவர பஸ்களை இயக்குவதாக உறுதி கூறினர். ஊத்துக்கோட்டை டெப்போ கிளை மேலாளர் அலுவலக பணி இருப்பதால் சம்பவ இடத்துக்கு வரவில்லை. தொலைபேசியில் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
இதனால் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு விட்டு கலைந்து சென்றனர். ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாதபட்சத்தில் மீண்டும் திடீர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.