ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.26 லட்சம் கொள்ளை 3 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் கைவரிசை


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.26 லட்சம் கொள்ளை 3 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 12 Dec 2017 4:45 AM IST (Updated: 12 Dec 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.26 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை பீளமேடு, தண்ணீர்பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இது அமைந்துள்ள இருபுறங்களிலும் ‌ஷட்டர்கள் உள்ளன. இதில் ஒருபுறத்தில் கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதில் வங்கி விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது. இந்த ‌ஷட்டர் எப்போதாவதுதான் மூடப்படும்.

ஏ.டி.எம். மையத்துக்குள் செல்வதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் கதவு பகுதியில் மற்றொரு ‌ஷட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ‌ஷட்டர் நேற்று முன்தினம் காலையில் இருந்து மூடப்பட்டு, அதில் பூட்டு போடப்பட்டு இருந்தது. இங்கு இருக்கும் ஏ.டி.எம். எந்திரம் அடிக்கடி பழுது ஏற்படுவதால், இந்த மையம் பூட்டப்பட்டு இருப்பது வழக்கம்.

இதற்கிடையே ஏ.டி.எம். மையத்தின் மெயின் ‌ஷட்டர் மூடப்பட்டு இருந்ததால், அது பழுதாகி இருக்கலாம் என்று நினைத்து வாடிக்கையாளர்கள் யாரும் அங்கு பணம் எடுக்க செல்லவில்லை. நேற்று மாலை ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் அந்த வழியாக ரோந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் மெயின் ‌ஷட்டர் பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

உடனே அவர்கள் அதன் அருகே சென்று, கண்ணாடி தடுப்புகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரின் இடைவெளி வழியாக பார்த்தபோது, அந்த மையத்துக்குள் இருக்கும் ஏ.டி.எம். எந்திரம் கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு, அதில் பணம் இருக்கும் 4 டிராயர்கள் (சிறிய அளவிலான பெட்டிகள்) திறந்து கிடந்தன. அவற்றில் பணம் எதுவும் இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களுடன் அந்த வங்கியின் அதிகாரிகளும் சென்றனர்.

போலீசார் அங்கு நடத்திய விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.26 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த மையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், மையத்துக்குள் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மீது ஸ்பிரே மூலம் ரசாயன நுரையை அடித்து, அங்கு நடக்கும் சம்பவங்கள் எதுவும் பதிவு ஆகாமல் இருக்க செய்துவிட்டு அலாரம் அடிக்கும் கருவியின் இணைப்பையும் துண்டித்து உள்ளனர். அதன் பின்னரே பணத்தை கொள்ளையடித்துவிட்டு, மெயின் ‌ஷட்டரை பூட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த ஏ.டி.எம். மையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் விளாங்குறிச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு திரண்டிருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் சீரானது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில், 7 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கோவையில் கடந்த 9–ந் தேதி இரவு 11.45 மணிக்கு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே இருக்கும் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. அதுபோன்று 10–ந் தேதி அதிகாலை 1.15 மணிக்கு பீளமேடு விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் அருகில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து, ரூ.3.35 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச்சென்றனர்.

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள்தான், இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மீண்டும் கைவரிசையை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

ரூ.26 லட்சம் கொள்ளை நடந்த ஏ.டி.எம். மையம் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 10–ந் தேதி அதிகாலை 2 மணிக்கு டிப்–டாப் ஆசாமிகள் 3 பேர் காரில் வந்து இறங்கி, ஏ.டி.எம். மையத்துக்குள் செல்வதும், பின்னர் அவர்கள் அரை மணி நேரம் கழித்து பணத்துடன் வெளியே செல்வதும் பதிவாகி உள்ளது.

ஏற்கனவே கோவையில் உள்ள 2 ஏ.டி.எம். மையங்களில் நடந்த சம்பவத்தில் பதிவாகி இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். அந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் 3 பேர்தான் என்பது தெரியவந்துள்ளது. எனவே 6 பேர் கொண்ட கும்பல், 2–ஆக பிரிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story