இட்லி குக்கர்கள் ஏற்றி வந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார்
ஆர்.கே.நகர் தொகுதியில், இட்லி குக்கர்கள் ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கிப்பிடித்து, வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர்.
ராயபுரம்,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர், போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இட்லி குக்கர்கள், தவா உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு மீஞ்சூரில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பொருட்கள் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காசிமேடு, எஸ்.என். செட்டி தெரு சிக்னல் அருகில், மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் ரவி செல்வம் தலைமையிலான போலீசார் அந்த லாரியை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில், இட்லி குக்கர்கள், தவா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. விசாரணையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு, அந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது. ஆனால், சரியான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த லாரி டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.