தாய்லாந்திற்கு கடத்த முயன்ற 210 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்


தாய்லாந்திற்கு கடத்த முயன்ற 210 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:45 AM IST (Updated: 12 Dec 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு கடத்த முயன்ற 210 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்த முயன்று சிக்கிய 2 பேருக்கு அதிகாரிகள் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த தமீம் அன்சாரி(வயது26), சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த சபூர்அலி(33) ஆகியோர் சுற்றுலா விசாவில் செல்ல வந்தனர்.

இவர்களது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் ஸ்கேனிங் செய்தபோது ஏதோ பொருட்கள் ஊர்ந்து செல்வதுபோல் இருந்தது. இதையடுத்து அந்த பெட்டிகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, இனிப்பு மற்றும் துணிகளின் அட்டை பெட்டிகளில் நட்சத்திர ஆமைகள் இருந்தது. அதில் 210 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி கிண்டி வனச்சரக காப்பாளர் கீதாஞ்சலிக்கு சுங்க இலாகா அதிகாரிகள் தகவல் தந்தனர். அவரது உத்தரவின் பேரில் கிண்டி வனச்சரக அதிகாரி முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் விமான நிலையம் சென்று 210 நட்சத்திர ஆமைகள், அவற்றை கடத்திக் கொண்டு வந்த 2 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது 2 பேரும் தாய்லாந்து செல்ல வந்தபோது தங்களிடம் விமான நிலையத்தில் வைத்து 2 பேர் எங்களிடம் சூட்கேசை தந்து தாய்லாந்து கொண்டு சென்றால் பாங்காக் விமான நிலையத்தில் இவற்றை வாங்கிக் கொண்டு தலா ரூ.10 ஆயிரம் தருவார்கள் என கூறினார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு வாங்கியதாகவும் நட்சத்திர ஆமைகள் கடத்தலுக்கு தங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story