ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2017 11:00 PM GMT (Updated: 2017-12-12T03:16:33+05:30)

ஓமலூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த கோட்டை மாரியம்மன்கோவில் அருகே அரசு புறம்போக்கு நிலம் 6.5 ஏக்கர் உள்ளது. இதில் சுமார் 2.5 ஏக்கர் நிலம் அப்பகுதியை சேர்ந்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் நடைபெற்று வந்தது. அந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் ஏற்கனவே அகற்றினர்.

மேலும் அங்குள்ள 1 ஏக்கர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த 18 பேர் வீடுகள் கட்டி காலம், காலமாக குடியிருந்து வந்தனர். இதேபோல் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்திலும் 12 பேர் வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர். இதனிடையே அந்த அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்ற மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று வருவாய்த்துறையினர் அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். உடனே அப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு தலைமையில் தி.மு.க. நகர செயலாளர் அப்துல்சமது, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முருகன், த.மா.கா. இளைஞரணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வசந்த் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஓமலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தி வைக்கும்படியும், அந்த பகுதி மக்களுக்கு அதே பகுதியிலேயே பட்டா வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தாசில்தார் சித்ரா, மேட்டூர் உதவி கலெக்டரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கும்படி கூறினார். உடனே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதே நேரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றும் பணியை வருவாய்த்துறையினர் தொடங்கினர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மணியம்மாள் (வயது 55), அவரது மகள் மாரியம்மாள், மருமகள் அம்பிகா, அவர்கள் தங்கள் குழந்தைகளான ஸ்ரீ தர்சன் என்ற ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய் கேனுடன் தங்கள் வீட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டனர்.

மேலும் வீட்டை இடித்தால் குடும்பத்துடன் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஓமலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தீயணைப்பு துறையினரும் அங்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஓமலூர் தாசில்தார் சித்ரா, வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் லலிதாஞ்சலி மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தங்களுக்கு இங்கேயே பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், ‘கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. உங்களுக்கு மேல்காமாண்டப்பட்டியில் மாற்று இடம் வழங்கப்படும். நீங்கள் அங்கு சென்று வீடு கட்டி கொள்ளலாம்‘ என தெரிவித்தனர்.

ஆனால் எங்களுக்கு அங்கு உடனடியாக பட்டா வழங்கினால்தான் செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். உடனே நிலம் ஒதுக்கப்பட்ட இடத்தின் வரைபடத்தை கொண்டு வந்து யார்? யாருக்கு எந்த மனை என்று குறிப்பிட்டு, அந்த இடத்திற்கு ஒருவார காலத்திற்குள் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்களை வருவாய்த்துறையினரே வாகனம் வைத்து மனைக்கு கூட்டிசென்று இடத்தை காட்டி வரவும், அவர்களின் வீட்டு சாமான்களை ஏற்றி செல்லவும் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது.

இருப்பினும் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

Next Story