ஹெல்மெட் சோதனையில் மோதல் போலீஸ் ஏட்டு-ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை


ஹெல்மெட் சோதனையில் மோதல் போலீஸ் ஏட்டு-ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை
x
தினத்தந்தி 11 Dec 2017 11:15 PM GMT (Updated: 2017-12-12T03:17:08+05:30)

திருச்சியில் போலீசார் நடத்திய ஹெல்மெட் சோதனையில் மோதல் ஏற்பட்டு போலீஸ் ஏட்டும், ரெயில்வே டிக்கெட் பரிசோதகரும் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி,

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மாநகரில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கின்றனர். இந்த சோதனை நடக்கும் பல்வேறு இடங்களில் போலீசாருக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் நேற்று இரவு போலீசார் நடத்திய ஹெல்மெட் சோதனையில் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும், ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கட்டி புரண்டு சண்டை போட்டனர்.

இந்த சம்பவம் பின்வருமாறு:-

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய ரவுண்டானாவில் நேற்று இரவு 8 மணியளவில் கண்டோன்மெண்ட் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் சோதனை நடத்தினர்.

அப்போது திருச்சி கோட்ட ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் கிராப்பட்டி அன்பு நகரை சேர்ந்த முத்துசாமி (வயது 34), திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரியும் தனது மனைவி சங்கரியை நேற்று இரவுப்பணிக்காக மொபட்டில் கொண்டு விட்டு விட்டு வீடு திரும்புவதற்காக புறப்பட்டார்.

அப்போது ஹெல்மெட் அணியாததால் முத்துசாமியை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இந்த நிலையில் போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு வேல்அழகர் என்பவர் ஹெல்மெட் அணியாததால் அபராதம் கட்டி விட்டு செல்லுமாறு கூறிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முத்துசாமி ரூ.100 அபராதம் கட்டி ரசீது பெற்றார். இதற்கிடையே ஹெல்மெட் சோதனையை முத்துசாமி தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை வாங்கி செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துசாமிக்கும், ஏட்டு வேல் அழகருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கி கொண்டு கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனை அந்தப்பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு வேடிக்கை பார்த்தனர். ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டதில் முத்துசாமிக்கு இடது கன்னத்திலும், வேல்அழகருக்கு இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் டிக்கெட் பரிசோதகருக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் சோதனையில் போலீஸ் ஏட்டுக்கும், ரெயில்வே டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story