கடலில் காணாமல்போன குமரி மாவட்ட மீனவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் ஜி.கே.மணி பேட்டி


கடலில் காணாமல்போன குமரி மாவட்ட மீனவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.மணி கூறினார்.

ஈரோடு,

பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மண்டல மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான மழை மற்றும் புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மீனவர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்படவில்லை.

கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்க வேண்டும் என்று கன்னியாகுமரி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையிலும் போராட்டம் தொடங்கி இருக்கிறது. எனவே கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியை துரிதப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, குஜராத் மாநில மீனவர்களுக்கும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் இதுபற்றி விசாரிக்க மத்தியக்குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்த மீனவர்கள் மற்றும் உடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மத்திய அரசுப்பணியிடங்களில் இடஒதுக்கீட்டில் முறைகேடு நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இந்திய மக்கள் தொகை அடிப்படையில் அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசு வேலை வாய்ப்பில் 49 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் அனைத்து சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் 100 சதவீதம் இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும். கிரிமிலேயர் என்கிற முறை ஒழிக்கப்பட வேண்டும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஜவுளி உற்பத்தி கேந்திரமாக இருக்கும் ஈரோடு, திருப்பூர், கரூர் மற்றும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது தொழில் நசிவடைந்து உள்ளது. மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜவுளித்தொழிலை மீண்டும் புனர் அமைக்கும் வகையில் புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதிக அளவில் மானியங்கள் அளிக்க வேண்டும்.

இதுபோல் சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே வரி விதிப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையில் வரியை குறைக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்டது. அந்த முறைகேடுகள் சீர்செய்யப்படாமல் மீண்டும் நடைபெறும் தேர்தல் முறையாக நடைபெறாது என்பதால் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை.

சேகர்ரெட்டி டைரியில் பல விஷயங்கள் வெளியாகி இருப்பதாக கூறினார்கள். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல் ஊழல், முறைகேடுகள் குறித்து அறிவிப்பு வருகிறது, ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்து 206 பக்க அறிக்கையை பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக கவர்னரிடம் கொடுத்து உள்ளார். அதை படித்துப்பார்த்து விட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் உறுதி அளித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்துவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னருக்கான அதிகார வரம்பை மீறி செயல்படக்கூடாது.

இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் கரூர் மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் வேலுச்சாமி, துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேல், மாவட்ட செயலாளர்கள் முத்துக்குமார், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மாவட்ட செயலாளர் அருள்மொழி நன்றி கூறினார். 

Next Story